திருமாவளவன் குறித்து பேசிய வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன் | மனம் மாறிய வைகோ
ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதற்கு திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Published : July 9, 2026 at 6:28 PM IST
தென்காசி: திருமாவளவன் பற்றி தான் கூறிய கருத்தைத் திரும்பப் பெறுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் மதிமுகவின் தென்காசி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, "தவெக அமைச்சரவையில் பங்கேற்போம், அதேநேரம் திமுக கூட்டணியிலும் தொடர்வோம் என்று திருமாவளவன் சொன்ன செய்தி எனக்கு அதிர்ச்சியளித்தது. வடதுருவமும், தென்துருவமும் எப்படிச் சேர முடியும்? என்ற அர்த்தத்தில் நான் பேசியிருந்தேன்.
அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பெரிய தலைவராக வர வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக நான் ஊக்கமளித்து வந்துள்ளேன். என் சொற்கள் அவரது மனதைப் புண்படுத்தியிருந்தால், அந்த வார்த்தைகளை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்; விசிக மீது எனக்கு எவ்வித கசப்புணர்வும் இல்லை. இக்கருத்தின் எதிரொலியாக மதிமுகவின் 'சங்கொலி' பத்திரிகை விழாவில் பங்கேற்கவிருந்த விசிக எம்பி ரவிகுமார் தமது வருகையைத் தவிர்த்துள்ளார்.
கடந்த கால ஆட்சிகளில் பள்ளி, கல்லூரி கட்டட அனுமதி முதல் பத்திரப்பதிவு வரை பரவிக் கிடந்த 'கமிஷன், கட்டிங், கரப்ஷன்' என்ற விஷச்செடியை முதலமைச்சர் விஜய் வேரோடு பிடுங்கி எறிந்துள்ளார். நிர்வாகச் சீர்திருத்தம், மின்வெட்டு, மின்கட்டண உயர்வு போன்ற பிரச்சனைகள் படிப்படியாகச் சரி செய்யப்படும். கமிஷன் இல்லாத நேர்மையான ஆட்சியைத் தந்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு எனது 'சபாஷ்'. அவர் மக்கள் நம்பிக்கையைப் பெற்றுள்ளார், அடுத்த 5 ஆண்டுகளுக்கும் அவரே முதலமைச்சராக நீடிப்பார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பதற்கு வெளியிலிருந்து ஆதரவுக் கொடுக்க திமுக முயன்ற மிகப்பெரிய அரசியல் மோசடியை காதர் மொய்தீன், சிபிஎம் தலைவர் பேபி ஆகியோர் உடைத்துள்ளனர். டாஸ்மாக் மற்றும் மணல் கொள்ளை லாபத்தைத் தொடரவே அவர்கள் அவ்வாறு திட்டமிட்டனர்.
கரூரில் முதலமைச்சர் விஜய்யைப் பேசவிடாமல் தடுக்க திமுக உச்சநீதிமன்றம் வரை சென்றது. அங்கு சவுக்கடி வாங்கிய பின், ஆளுநரைச் சந்தித்து 356- வது பிரிவைப் பயன்படுத்தி இந்த ஆட்சியைக் கலைக்கக் கோருகிறார்கள். அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையை திமுக குழிதோண்டிப் புதைத்துவிட்டது.
மதிமுகவிலிருந்து 2 எம்எல்ஏக்கள் சென்றதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், முன்பு கம்பம் ராமகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை ராஜினாமா செய்ய வைத்து உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்த திமுகவிற்கு, ஜனநாயகத்தைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை. மதிமுகவின் 'பம்பரம்' சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கவில்லை. குறிப்பிட்ட விகிதாச்சாரத் தொகுதிகளில் போட்டியிடும்போது அந்த சின்னம் மீண்டும் எங்களுக்குக் கிடைக்கும்" என்று வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
| இதையும் படிங்க: சகோதரரை தாக்கிய வழக்கு; நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு விலக்கு |
மேலும், வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சர் பதவியை தாம் மறுத்ததையும், பொடா (POTA) சட்டத்தில் பத்திரிகையாளர்களைக் கைது செய்யும் சரத்தை வாஜ்பாயிடம் வாதிட்டு நீக்கச் செய்ததன் மூலம் ஊடக சுதந்திரத்தைக் காத்ததையும் தனது 62 ஆண்டு காலப் பொதுவாழ்க்கையின் நினைவுகளாக வைகோ சுட்டிக்காட்டினார்.

