ஆபத்துக் காலங்களில் சிங்கப்பெண் செயலியை பயன்படுத்துவது எப்படி? ஐஜி பவானீஸ்வரி விளக்கம்
"வீட்டை விட்டு வெளியே சென்றாலே, இயர்போன் அணிந்து வெளியுலகை கவனிக்காமல் பல பெண்கள் இருக்கிறார்கள். இதுவே அவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்க முதன்மையான காரணம்" என சிங்கப்பெண் சிறப்பு படை ஐஜி பவானீஸ்வரி கூறினார்.

Published : July 8, 2026 at 4:06 PM IST
சென்னை: ஆபத்துக்காலங்களில் சிங்கப்பெண் செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஐ.ஜி. பவானீஸ்வரி விளக்கம் அளித்துள்ளார்.
பாலியல் கொடுமைகள், வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்காக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தமிழக அரசு அண்மையில் உருவாக்கியது. இந்த சிறப்புப் படையின் ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற மாணவர் பேரவை தொடக்க விழாவில் ஐஜி பவானீஸ்வரி கலந்துகொண்டார். அப்போது மாணவிகள் மத்தியில் அவர் பேசியதாவது:
சிங்கப் பெண் செயலியில் எஸ்ஓஎஸ் (SOS) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் உடனடியாக அவசரகால அழைப்பு சென்றுவிடும்.
மேலும், சம்பவ இடத்தின் இருப்பிட தகவலும் அதில் இடம்பெறும். இதனை வைத்து, அப்பகுதியில் உள்ள போலீசார் விரைந்து வந்து உதவுவார்கள்.
சில நேரங்களில் எஸ்ஓஎஸ் பொத்தானை அழுத்த முடியாத சூழல் ஏற்பட்டாலும் கூட, முன்கூட்டியே 'ட்ரிகர்' (Trigger) வசதியை இயக்கி வைத்திருந்தால், செல்போனை வேகமாக அசைத்தாலே அவசர அழைப்பு தானாக சென்று விடும்.
இந்த வசதியை பள்ளி, கல்லூரி மாணவிகள் மட்டுமின்றி அனைத்து பெண்களும் பயன்படுத்த வேண்டும். தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணும் தைரியமானவர்கள்தான். ஆபத்தான சூழலில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் மன உறுதியை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
செல்போன் இல்லாத சூழலிலும், சத்தமாக குரல் கொடுத்து உதவி கேட்க தயங்கக் கூடாது. குழந்தைகளுக்கு பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து பெற்றோர்கள் கட்டாயம் சொல்லித்தர வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான பெரும்பாலான துஷ்பிரயோகங்கள், வெளி ஆட்களால் நடப்பது கிடையாது. அக்கம்பக்கத்தினராலும், உறவினர்களாலுமே நடக்கிறது.
எனவே, இதுபற்றி குழந்தைகளிடம் தொடர்ந்து பேசுவதும், அவர்களுக்கு தைரியம் அளிப்பதும் மிகவும் அவசியம். பெண்கள் தனியாக செல்லும் போது, சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டாலே, காதில் இயர்போன் அணிந்து வெளியுலகை கவனிக்காமல் பல பெண்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை கவனிப்பதுதான், பெண்களின் பாதுகாப்புக்கு முதல் படி ஆகும்.
சிங்கப்பண் அதிரடிப்படைக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம், பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பயமின்றி, மிக எளிதாக பெண் காவலர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, சிங்கப்பெண் அதிரடிப் படையில் 2,546 புதிய பணியிடங்களை உருவாக்கியுள்ளார். இதற்கான ஆள்சேர்ப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன என ஐஜி பவானீஸ்வரி கூறினார்.

