ETV Bharat / state

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

அரசு பள்ளி மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையம்
கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 4, 2026 at 1:22 PM IST

1 Min Read
Choose ETV Bharat

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை அடுத்த ஆனைமலையான்பட்டியை சேர்ந்தவர் சுதாகரன் (50). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள உரிகம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தலைமை ஆசிரியர் சுதாகரன் பள்ளியில் இருந்த போது அங்கு படிக்கும் 5 ஆம் வகுப்பு மாணவியான 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

மாணவி கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார். மேலும், பள்ளி மாணவ- மாணவியரின் பெற்றோர், 1098 என்ற குழந்தைகள் அவசர கால உதவி எண்ணிற்கு புகார் செய்துள்ளனர்.

போக்சோவில் கைதான தலைமை ஆசிரியர்
போக்சோவில் கைதான தலைமை ஆசிரியர் (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: இரட்டை கொலைக்கு காரணமான போஸ்டர் பிரச்சினை? நாங்குநேரி சம்பவத்தில் வெளியான அதிர்ச்சி பின்னணி

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் பாதுகாப்புத் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் நேற்று அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் அடிப்படையில், தலைமை ஆசிரியர் சுதாகரனை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் சுதாகரனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இவர் ஏற்கனவே அஞ்செட்டி அருகே தேவன்தொட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய போது, அவர் மீது இதே போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததால், கடந்த இரு மாதங்களுக்கு முன் தான், இந்த பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.