'சஹர்' உணவு தயாரிக்கும் பணியில் இந்துப் பெண்மணி - மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு
நெய் சோறு, குஸ்கா, வெஜ் பிரியாணி, பருப்பு சாதம், தக்காளி சாதம் ஆகியவை தான் மைதீன் அப்துல் காதரின் சஹர் உணவு மெனு. இவற்றுடன் அவித்த முட்டை, கத்தரிக்காய் பச்சடியும் வழங்கி வருகிறார்.

Published : February 23, 2026 at 7:16 PM IST
-By அப்துல் கரீம்
திருச்சி: இஸ்லாமியர்களின் சஹர் உணவு தயாரிக்கும் பணியில் இந்துப் பெண்மணி பங்கெடுத்து உதவுவது மதநல்லிணக்கத்திற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் கடந்த 5 நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்த மாதத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் 5 கடமைகளில் ஒன்றான நோன்பு இருந்து வருகின்றனர். அதிகாலை 4 மணி முதல் மாலை 6.30 மணி வரை எந்தவித உணவையும் உண்ணாமல் நோன்பு இருந்து வருகின்றனர்.
நோன்பு காலத்தில் அதிகாலை சாப்பிடும் உணவு சஹர் என்றும் மாலை நோன்பு திறக்கும் போது சாப்பிடுவது இஃப்தார் என்றும் அழைக்கப்படுகிறது.
இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் வேளையில் பள்ளிவாசல்களில் வழங்கப்படும் நோன்பு கஞ்சிக்காக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் நிதியுதவி செய்து மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல், பல இடங்களில் சஹர் சாப்பாடுகளையும் இவர்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், திருச்சியில் இஸ்லாமியர்கள் சஹர் உணவு தயாரிக்கும் பணியில், உதவி வருகிறார் செல்வி ராஜேஸ்வரி.
திருச்சி காஜாமலை அருகே ஜே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் பேராசிரியர் மைதீன் அப்துல் காதர். இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டு காலமாக வசித்து வருகிறார். முன்பு கல்லூரி ஒன்றில் பணியாற்றி வந்த இவர், அந்த பணியை விட்டு விட்டு வீட்டிலேயே மாணவ, மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வருகிறார்.
வெளி மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு வந்து தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் சஹர் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதனை அறிந்த மைதீன் அப்துல் காதர், மாணவ, மாணவிகளுக்கு சஹர் உணவு தயாரித்து வழங்கும் பணியை முதன் முறையாக தொடங்கினார். அதுவும் இலவசமாகவே. முதலில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகளுக்கு சஹர் உணவை வழங்கத் தொடங்கிய மைதீன் அப்துல் காதர் தற்போது 100-க்கும் மேற்பட்டோருக்கு தினந்தோறும் வழங்கி வருகிறார். நண்பர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடையை வைத்து, சஹர் உணவை தயாரித்து வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டும் அவர் வழக்கம் போல், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சஹர் உணவை தயாரித்து வழங்கி வருகிறார். இந்த நிலையில், சஹர் உணவு தயாரிக்கும் பணியில் இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரான செல்வி ராஜேஸ்வரியும் பங்கெடுத்து வருகிறார். இவர், தனது வீட்டின் ஒரு பகுதியை உணவு சமைக்க கொடுத்ததோடு மட்டுமல்லாமல், சஹர் உணவு தயாரித்து அதனை பார்சல் போடுவது வரை உதவி செய்து வருகிறார்.
நெய் சோறு, குஸ்கா, வெஜ் பிரியாணி, பருப்பு சாதம், தக்காளி சாதம் ஆகியவை தான் மைதீன் அப்துல் காதரின் சஹர் உணவு மெனு. இவற்றுடன் அவித்த முட்டை, கத்தரிக்காய் பச்சடியும் வழங்கி வருகிறார்.
இது தொடர்பாக மைதீன் அப்துல் காதர் கூறுகையில், "இலவசமாக சஹர் உணவு வழங்கும் பணியை கடந்த 7 ஆண்டுகளாக செய்து வருகிறேன். இந்த பணி தினமும் இரவு 8 மணிக்கே தொடங்கி விடும். உணவு தயாரிக்கும் பணியை நானும் எனது தாயார் பாத்திமாவும் செய்து வந்தோம். தற்போது எங்களுடன் வீட்டின் உரிமையாளர் செல்வி ராஜேஸ்வரி அம்மாவும் இணைந்துள்ளார். வெங்காயம் வெட்டுவது, வெல்லப்பூடு உரிப்பதில் தொடங்கி, அடுப்பில் சட்டியை வைத்து உணவு தயாரித்து முடித்து அதனை பார்சல் போடும் வரை தினமும் கூடவே நின்று உதவுகிறார் செல்வி ராஜேஸ்வரி அம்மாள்" என்றார்.
இது குறித்து வீட்டின் உரிமையாளர் செல்வி ராஜேஸ்வரி கூறுகையில், "எனது வீட்டில் குடியிருக்கும் பாத்திமா மற்றும் அவரது மகன் மைதீன் அப்துல் காதர் ஆகியோர் இஸ்லாமியர்களுக்கு நோன்பு வைக்க சஹர் உணவு தயாரித்து இலவசமாக வழங்கி வருகின்றனர். அவர்கள் தினமும் இரவு 8 மணிக்கு இந்த பணிகளை தொடங்கி விடுவார்கள். நானும் அந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். ஜாதி மற்றும் மதம் பார்க்காமல் மனிதநேயம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். இது என் மனதிற்கு ஒருவித அமைதியான உணர்வை ஏற்படுத்துகிறது" என தெரிவித்தார்.
நாம் சென்ற போது சுடச்சுட குஸ்கா தயாராக இருந்தது. மேலும், முட்டைகளும் அவித்து தயாராக வைக்கப்பட்டிருந்தன. இவற்றை தனித்தனியாக பார்சலாக கட்டும் பணியை மைதீன் அப்துல் காதர், அவரது தாயார் பாத்திமா மற்றும் வீட்டின் உரிமையாளர் செல்வி ராஜேஸ்வரி ஆகியோர் மேற்கொண்டனர். பின்னர் பார்சல்களை எடுத்துக் கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்க தயாரானார் மைதீன் அப்துல் காதர்.
தொடர்ந்து பேசிய அவர், "பார்சல் போடப்பட்ட உணவுகளை விநியோகம் செய்யும் பணி இரவு 11 அளவில் தொடங்கும். அதிகாலை 4 மணி வரை சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளுக்குச் செல்வேன். அங்குள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த உணவை வழங்குவேன். திருச்சி கே.கே. நகர், சுப்பிரமணியபுரம் மற்றும் புறநகர் பகுதியான சேதுராப்பட்டி ஆகிய இடங்களில் உள்ளவர்களுக்கு நேரில் சென்று சஹர் உணவு வழங்குகிறேன்" எனறார்.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு வைப்பதற்காக சஹர் உணவு தயாரிக்கும் பணியில் செல்வி ராஜேஸ்வரி அம்மாள் பங்கெடுத்து உதவுவது மதநல்லிணக்கம் மாய்ந்து போகவில்லை என்பதை காட்டுகிறது.

