சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை'' - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
ஆக்கிரமிப்புகளை அகற்ற நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர்கள், அவர்களின் மொபைல் எண்களை என்எஸ்சி போஸ் சாலையில் பொதுமக்கள் புகாரளிக்க ஏதுவாக பலகையில் தெரியுமாறு வைக்க வேண்டும்.

Published : January 8, 2026 at 9:59 PM IST
சென்னை: சென்னை என்எஸ்சி போஸ் சாலை, நடைபாதையில் அகற்றப்பட்ட கடைகள் மீண்டும் அமைக்கப்பட்டது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அகற்றப்படும் கடைகள் மீண்டும் உருவாகாமல் தடுக்கும் வகையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் என்.எஸ்.சி போஸ் சாலை, வியாபாரம் செய்யக் கூடாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கடைகள் அகற்றப்பட்ட பிறகும் கூட மீண்டும் முளைத்து விடுவதாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர்கள், அவர்களின் மொபைல் எண்களை என்எஸ்சி போஸ் சாலையில் பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக பலகையில் தெரியும்படி வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பை கண்காணிக்க இரண்டு வழக்கறிஞர்களை ஆணையர்களாக நியமித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகள் மீண்டும் உருவானதாக வழக்கறிஞர்கள் ஆணையர் அறிக்கை அளித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

