ETV Bharat / state

இங்கிலாந்து நபர் மீதான உ.பா வழக்கை ரத்து செய்ய முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

தடை செய்யப்பட்ட ஹிசீப் உத் தஹ்ரீர் அமைப்பின் தலைவர்களுடன் தொடர்பு வைத்து, இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க தீவிரவாத எண்ணங்களை பரப்பியதற்கான ஆதாரம் உள்ளதால் உபா வழக்கை ரத்து செய்ய முடியாது

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 6:26 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து நபர் மீதான உபா வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து குடியுரிமை பெற்ற அஸீஸ் அஹ்மத் என்பவர், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள உ.பா. வழக்குகளை தள்ளுபடி செய்ய மறுத்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் காளீஸ்வரன் ராஜ் மற்றும் ஐ. அப்துல் பசித் ஆஜராகினர். அவர்கள், "குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் எந்தவித வெடிபொருட்களையும் என்.ஐ.ஏ கைப்பற்றவில்லை எனவும், சில டிஜிட்டல் தரவுகள் மற்றும் குறுஞ்செய்திகளை மட்டுமே வைத்து இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதி தேர்தல் வெற்றி தொடர்பாக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் மனுதாரர் சிறையில் இருப்பதால் அவரை பிரிந்து அவரது மனைவியும், குழந்தையும் தவித்து வருவதாகவும் எனவே இந்த வழக்கில் இருந்து அஸீஸ் அஹ்மதை விடுவிக்க வேண்டும்" எனவும் முறையிட்டனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், என்.ஐ.ஏ சிறப்பு வழக்கறிஞர் ஆர்.கார்த்திகேயன் ஆகியோர், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் அஸீஸ் அஹ்மத், தடை செய்யப்பட்ட ஹிசீப் உத் தஹ்ரீர் அமைப்பின் தலைவர்களுடன் தொடர்பு வைத்து கொண்டு, இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க தீவிரவாத எண்ணங்களை பரப்பி வந்ததாகவும், இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த பணம் திரட்டி வந்ததாகவும் தெரிவித்தனர். இதற்கான வங்கி மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை என்.ஐ.ஏ கைப்பற்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், மனுதாருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதால், அவரை வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய புலனாய்வு முகமை அஸீஸ் அஹ்மத்தை உபா சட்டத்தின் கீழ் கைது செய்தது. ஹிசீப் உத் தஹ்ரீர் எனும் தடை செய்யப்பட்ட அமைப்பின் சார்பில், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை அமைக்கும் நோக்கில் தீவிரவாத கருத்துகளை கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இவர் பரப்பி வந்ததாக என்ஐஏ குற்றம்சாட்டி இருந்தது.

இந்த வழக்குகளை விசாரணை செய்து வந்த பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம், இவர் மீதான உ.பா. வழக்குகளை ரத்து செய்யவும் பிணை வழங்கவும் மறுப்பு தெரிவித்தது.. இதை எதிர்த்து, அஸீஸ் அஹ்மத் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.