மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஊழல் புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
விசாரணை அமைப்புகள், தங்கள் பணியை முறையாகச் செய்யாத போது, வேறு அமைப்புக்கு விசாரணையை மாற்றுவது அவசியமாகிறது என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Published : February 25, 2026 at 10:44 PM IST
மதுரை: காமராசர் பல்கலைக்கழகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
காமராசர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி மதுரையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "கோமதி என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு இளநிலை எழுத்தராக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் சிலருடன் கூட்டு சேர்ந்து செல்வாக்கு மிக்க நபராக மாறி தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். அவர் மீது சட்ட விரோதமாக சான்றிதழ்கள் வழங்கியது, பல்கலைக்கழக ஆவணங்களை வெளியிட்டது, ஆய்வு மற்றும் இணைப்பு வழங்குவதில் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. தண்டனை என்ற பெயரில் அவரை வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அவர் வண்டியூரில் 2 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியுள்ளார். மேலும், ஊழியர்களுக்கு 2 கோடிக்கு மேல் கடன் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது அரசு சேவை விதிகளுக்கு முரணானது. அது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடந்த ஆண்டு நான் புகார் அளித்தேன். எவ்வித பதிலும் இல்லாத நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, அந்த புகார் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டதாக பதிலளிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் எனது புகாரில் முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கு முடித்ததாக தெரிவிக்கப்பட்டது. இது சரியானது அல்ல எனவே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உதவியுடன் நியாயமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே ராமகிருஷ்ணன் அமர்வு, "அரசுப் பணியாற்றும் நபர் மீது புகார் எழுகையில் முறையாக அனுமதி பெற்று, அது தொடர்பான விசாரணையை செய்ய வேண்டும். யார் புகார் அளித்தார்? என்பது தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டிய தேவையில்லை.
பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் தரப்பில், கோமதி மீதான குற்றச்சாட்டுக்கு மாகாந்திரம் இல்லை எனக் கூறி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை அமைப்பாக செயல்படாமல், தபால் நிலையமாக மட்டும் இந்த விஷயத்தில் செயல்பட்டு புகாரை அப்படியே பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியுள்ளது.
விபரங்களை சரிபார்ப்பது எனில் ஊழியரின் பதிலை கேட்பது மட்டுமல்ல, விசாரணை அதிகாரி வேறு இடங்களிலிருந்தும், விபரங்களைப் பெற்று விசாரித்திருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் ஊழல் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது எதிர்கால சந்ததியினரையும் பாழாக்குகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற விசாரணை அமைப்புகள், தங்கள் பணியை முறையாகச் செய்யாத போது, வேறு அமைப்புக்கு மாற்றுவது தேவையாகிறது. ஆகவே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

