சேவல் சண்டைக்கு அனுமதி இல்லை - மதுரை அமர்வு திட்டவட்டம்
முந்தைய உத்தரவை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் சேவல்சண்டை நடத்த அனுமதி கோரி யாரும் மனுத் தாக்கல் செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Published : August 30, 2026 at 9:31 AM IST
மதுரை: சேவல்சண்டை நடத்துவது சட்டவிரோதமானது என்றும், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
விலங்குகளை வதை செய்வதைத் தடுக்கும் Prevention of Cruelty to Animals Act, 1960 சட்டத்தின்கீழ், சேவல் சண்டை தடை செய்யப்பட்டுள்ளதால், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
2017-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஒருவர், தங்களது கிராமத்தில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் சேவல் சண்டைக்கு 2017-ம் ஆண்டு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை எனக் கூறி உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
அப்போது, குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் சேவல்சண்டை நடத்த அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. குறிப்பாக, அரசு கால்நடை மருத்துவமனையின் கால்நடை மருத்துவர் நிகழ்வை கண்காணிக்க வேண்டும், சேவல்களுக்கு காயம் ஏற்படாத வகையில் நடத்த வேண்டும், சேவல்களுக்கு மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருட்களை வழங்கக்கூடாது, கால்களில் கத்தி கட்டக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் நீதிமன்றத்தை அணுகினர்.
சேவல்சண்டை நடத்துவதை Prevention of Cruelty to Animals Act-ன் பிரிவுகள் 3(2), 11 மற்றும் 28 தடை செய்வதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சட்டத்தில் தடை செய்யப்பட்ட ஒரு நிகழ்வுக்கு முந்தைய அமர்வு வழங்கிய அனுமதி உத்தரவு சட்டத்திற்கு முரணானது எனத் தெரிவித்தது.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்டமே சேவல்சண்டையை தடை செய்யும் நிலையில், அதற்கு அனுமதி வழங்கிய முந்தைய உத்தரவு, 'முற்றிலும் தேவையற்றது மற்றும் சட்டத்திற்கு முரணானது' எனக் குறிப்பிட்டது.
மேலும், முந்தைய உத்தரவை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் கோழிச்சண்டை நடத்த அனுமதி கோரி யாரும் மனுத் தாக்கல் செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
| இதையும் படிங்க: கோலாகலமாக தொடங்கிய பெசன்ட் நகர் மாதா ஆலய திருவிழா |
கடந்த 2023-ம் ஆண்டு பொங்கல் விழாவையொட்டி நடத்த திட்டமிடப்பட்ட சேவல் சண்டைகளில் பறவைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நிபந்தனைகளை உயர்நீதிமன்றம் விதித்திருந்தது. ஆனால், 2025-ம் ஆண்டு மற்றொரு வழக்கில், சேவல்சண்டை நடத்துவதற்கு சட்டப்பூர்வ உரிமை எதுவும் இல்லை என்றும், மனிதர்களால் ஏற்பாடு செய்யப்படும் விலங்கு சண்டைகளை சட்டம் வெளிப்படையாகத் தடை செய்கிறது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த தீர்ப்பின் மூலம், 'பாரம்பரியம்', 'கிராமிய விளையாட்டு' அல்லது 'முந்தைய நீதிமன்ற அனுமதி' என்ற காரணங்களை முன்வைத்து சேவல்சண்டைக்கு அனுமதி பெறும் முயற்சிகளுக்கு சட்டரீதியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அனுமதி உத்தரவே சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றம் தற்போது தெளிவுபடுத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

