மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு புகார் - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
வீரவசந்தராயர் மண்டப புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், அப்பணிகள் முடிந்தவுடன் குடமுழுக்கு விரைவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published : July 7, 2026 at 5:57 PM IST
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பாக தாக்கல் செய்த மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை முறையாக மீட்டு பராமரிக்கவும், கோவிலை புனரமைத்து விரைவாக குடமுழுக்கு நடத்தவும் உத்தரவிட வேண்டும்" என அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "ஆக்கிரமிப்புகள் தொடர்பாக கணக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. வீரவசந்தராயர் மண்டப புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், அப்பணிகள் முடிந்தவுடன் குடமுழுக்கு விரைவில் நடத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேசிய நீதிபதிகள், "தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணி எப்போது முழுமையடையும், பிரசாதம் தயாரிக்கும் சமையல் கூடத்தை நவீன முறையில் அமைக்கும் வகையில் அது எப்போது வேறு இடத்திற்கு மாற்றப்படும்" என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்களின் பெயர், முகவரி விபரங்கள் அடங்கிய அறிக்கையை அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

