ETV Bharat / state

மூட நம்பிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் பணிந்து போகக்கூடாது - உயர் நீதிமன்றம் கருத்து

ஒருவர் தன்னுடைய சொந்த இடத்தில் சிலைகள் வைத்து அமைதியாக வழிபாடு நடத்தினால் அதற்கு எதிராக பெரும்பான்மை என்ற பெயரில் பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க முடியாது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 3, 2026 at 8:00 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: மூட நம்பிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் பணிந்து போகக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை எண்ணூர், நெட்டுக்குப்பம், பஜனைக் கோயில் தெருவில் வசித்து வரும் கார்த்திக் என்பவர் தனது வீட்டில் சிவசக்தி, தக்‌ஷீஸ்வரி, விநாயகர், வீரபத்திரன் சுவாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வந்தார். பூஜைகளில் அண்டை வீட்டாரும் பங்கேற்று வந்துள்ளனர்.

சிலைகள் வைத்து வழிபாடு நடத்திய பிறகு அந்த பகுதிகளில் மர்மமான முறையில் சிலர் மரணமடைந்துள்ளதாக கூறி உள்ளூர் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சிலைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிலைகளை திரும்ப ஒப்படைக்கவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிப்பெருக்கி பயன்படுத்தக் கூடாது என்றும், பொது மக்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்றும் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகள் இதுவரையில் சிலைகளை ஒப்படைக்கவில்லை என்று கூறி கார்த்திக் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று சிலைகளை பெற்றுக் கொள்ளும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி சிலைகளை மனுதாரர் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த நீதிபதி, ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் என்றும், மனுதாரர் தனது வீட்டில் அனுமதி இல்லாமல் கோயில் கட்டியிருந்தால் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.

அதே போல உண்டியல் வைத்து இருந்தால் நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். மேலும் ஒருவர் தன்னுடைய சொந்த இடத்தில் சிலைகள் வைத்து அமைதியாக வழிபாடு நடத்தினால் அதற்கு எதிராக பெரும்பான்மை என்ற பெயரில் பொதுமக்கள் சட்டத்தை தங்களுடைய கையில் எடுக்க முடியாது என்றும், அரசு அதிகாரிகள் மூடநம்பிக்கைகளுக்கும், தவறான நம்பிக்கைகளுக்கும் பணிந்து செல்லக்கூடாது என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 'புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு' - காலவரையற்ற போராட்டத்தை வாபஸ் பெற்ற அரசு ஊழியர்கள்

கடவுளோ, சிலைகளோ மனித இனத்துக்கு எந்த தீங்கும் ஏற்படுத்துவது இல்லை என்றும், இதுபோன்ற நம்பிக்கைகளை பக்தியாகவோ? அறிவியலாகவோ? நாம் என்றும் கருத முடியாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.