ETV Bharat / state

நாட்டு வகை மரங்களை மீட்டெடுக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

வனத்துறை அலுவலர்கள் ஏற்கெனவே இந்தச் செயலில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த அரசாணை அவர்களின் நடவடிக்கைக்கு அனுமதி வழங்குவது போல் உள்ளது. ஆகவே அரசாணைக்கு 8 வாரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 6:38 PM IST

1 Min Read
Choose ETV Bharat

மதுரை: கொடைக்கானல் வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு வகை தாவரங்களை அகற்றிவிட்டு நாட்டு வகை மரங்களை மீட்டெடுக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடைவிதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசு கொடைக்கானல் வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு வகை தாவரங்களை அகற்ற அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில் நாட்டு வகை மரங்களும் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் 4 வன அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது முறையான நடவடிக்கை இல்லை. ஆகவே கொடைக்கானல் வனப்பகுதியில் மரங்களை வெட்டி விற்பனை செய்த வன அலுவலர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகைக்கான OTP யூடியூப் சேனலில் வருமா? அமைச்சரின் பேச்சால் குழம்பிய மக்கள்

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோரை கொண்ட இரண்டு நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ''வனத்துறை அலுவலர்கள் ஏற்கெனவே இந்த செயல்களில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த அரசாணை அவர்களின் நடவடிக்கைக்கு அனுமதி வழங்குவது போல் உள்ளது. ஆகவே அந்த அரசாணைக்கு 8 வாரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.'' என உத்தரவிட்டனர்.

மேலும், 'பிற மரத்தை அடையாளம் காண என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?' என்பது குறித்தும் அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.