ETV Bharat / state

கொளத்தூர் தொகுதி வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 3, 2026 at 11:52 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக்கோரி தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தோல்வியடைந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஆகியவை சரிபார்க்கப்பட்டன.

உயர் நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் தேர்தல் வழக்கு

இதையடுத்து தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “கொளத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி. பேடுகளையும் மீண்டும் சரிபார்க்க உத்தரவிட வேண்டும். மேலும், த.வெ.க எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் கடந்த முறை ஆகஸ்ட் 31-ஆம் தேதி விசராணைக்கு வந்தபோது, தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், “45 நாட்களுக்கு பிறகு தான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. அதனால் காலதாமதமாக வழக்குப்பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த தேர்தல் வழக்கை விசாரணைக்கு ஏற்று, எல்லா வாக்கு பதிவு இயந்திரங்களையும் சரிபார்க்க உத்தரவிட வேண்டும். மேலும், இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் மே 7-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த நிலையில், ஜூலை 29 அன்று தான் சரிபார்ப்பு பணிகள் தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி முடித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் தான் காலதாமதமாக வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் ஆணையம் தனது பணியை சரியாக செய்யவில்லை. அதற்கு மனுதாரர் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தேர்தல் நடைமுறைகளில் உள்ள சில குறைபாடுகள் காரணமாக வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வழக்கு தொடர முடியாது என சட்டத்தில் தெளிவாக உள்ளது. மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் பிரிவு 329(b)-இன் படி முறைகேடு நடந்ததாக வழக்கு தொடர முடியாது.

தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். முறைகேடு நடந்ததாக கூறி சட்ட விதிகளுக்கு எதிராக, தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். தேர்தலில் போட்டியிட்ட யார் மனு அளித்தாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்படும்.

அதன்படி, மு.க. ஸ்டாலின் மனுவின் அடிப்படையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டது. அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. மேலும் அவரது தரப்பில் கூறப்படுவது போல 14 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பழுதாகவில்லை. எந்த வாக்குப்பதிவு இயந்திரங்களும் மாற்றப்படவில்லை. சிறு கோளாறுகள் மட்டுமே இருந்தது. அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொளத்தூர் தேர்தல் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள்

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் யாருக்கும் நோட்டீஸ் அனுப்ப முடியாது. இடைக்காலமாக எந்த நிவாரணமும் வழங்க முடியாது என தெரிவித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (செப்டம்பர் 3) தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.