ETV Bharat / state

2021 தேர்தலில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் வெற்றியை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

2026-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட துரைமுருகன், தவெக வேட்பாளரிடம் சுமார் 7,643 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 7, 2026 at 7:26 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வெற்றி பெற்றதை உறுதிச் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், அதிமுக வேட்பாளர் வி.ராமுவை விட 746 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

இதையடுத்து, துரைமுருகனின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வி.ராமு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், "வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை; அதிகாரிகள் உதவியுடன் துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனால் துரைமுருகனின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிப்பதுடன், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் வி.ராமு தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தரப்பில் தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "16- வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்து 17- வது சட்டமன்றம் அமைந்துவிட்டது. வாக்குக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின் படி, பதவிகாலம் முடிந்துவிட்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படாத இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல" என்று வாதிட்டார்.

அப்போது அதிமுக வேட்பாளர் வி.ராமு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "2016- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் சமீபத்தில் வெளியான தீர்ப்பை சுட்டிக்காட்டி, பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதால் தேர்தல் வழக்கு செல்லக்கத்தக்கதல்ல எனக்கூற முடியாது" என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 07) இந்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் தீர்ப்பளித்துள்ளார். தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி துரைமுருகன் தொடர்ந்த வழக்கை ஏற்ற நீதிபதி, அதிமுக வேட்பாளர் வி.ராமு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பின் மூலம் 2021-ல் நடந்த தேர்தலில் துரைமுருகன் வெற்றி பெற்றது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சர் என்ன பேச வேண்டும் என்பதை உத்தரவு பிறப்பித்து ஒழுங்குபடுத்த முடியுமா? திமுகவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

இதனிடையே, 2026-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட துரைமுருகன், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரிடம் சுமார் 7,643 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மேலும் அவர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.