நான்கு வயது சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்ற கிளை
அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாட்சியங்கள் அடிப்படையில் நீதிமன்றம் முறையாக விசாரணை செய்து குற்றவாளிக்கு உரிய தண்டனையை வழங்கி உள்ளது என வாதிட்டார்.

Published : March 2, 2026 at 7:16 PM IST
மதுரை: நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர், கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு அங்கன்வாடி மையம் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை அருகே உள்ள காளியம்மன் கோயில் அருகே அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கந்தசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு ராமநாதபுரம் மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் விசாரணை முடிந்து கந்தசாமி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து தன்னை விடுவிக்க கோரி கந்தசாமி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் இளந்திரையன் மற்றும் பூர்ணிமா அமர்வு முன்பாக விசரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் கந்தசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை.
கந்தசாமியின் குடும்பத்திற்கும் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்தது, எனவே, இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜரானார். அப்போது அவர், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மருத்துவச் சான்றுகள் தெளிவாக உள்ளன. மேலும், சாட்சியங்கள் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் முறையாக விசாரணை செய்து குற்றவாளிக்கு உரிய தண்டனையை வழங்கி உள்ளது. எனவே இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய நடிகை தேவி பிரியாவின் கார் - ஓட்டுநர் உயிரிழப்பு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இளந்திரையன் மற்றும் பூர்ணிமா அமர்வு, "விசாரணை நீதிமன்றம் சட்டப்படி அனைத்தையும் நடைமுறைகளையும் பின்பற்றி இருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட குழந்தை அனைத்து கேள்விகளையும் புரிந்து கொண்டு உடனடியாக பதிலளித்து இருக்கிறார். எனவே இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என உத்தரவிட்டனர். மேலும், குற்றவாளியை கைது செய்து விசாரணை நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்படுத்தவும் காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.

