வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் ஹம்பாந்தோட்டைக்கும் கல்முனைக்கும் இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published : January 8, 2026 at 1:09 PM IST
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது எனவும், அது நாளை மாலை அல்லது இரவு இலங்கை கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 5.30 மணிக்கு வலுப்பெற்றது.
இது அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை ஜனவரி 9ஆம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கையின் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை இடையே இலங்கை கரையை கடக்க வாய்ப்புள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு 1020 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 860 கிலோமீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு தென்கிழக்கு 570 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது நிலை கொண்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் நாளை இடி, மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
| இதையும் படிங்க: ரோபோடிக்-கை, டெலி மெடிசின் இயந்திரம்: கண்டுபிடிப்புகள் மூலம் வியக்க வைத்த பள்ளி மாணவர்கள் |
வடகடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஏனைய தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும் நாளை மறுநாள் (ஜன.10) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

