ETV Bharat / state

24 மணி நேர அதிதீவிர தொடர் கண்காணிப்பில் நல்லகண்ணு - மருத்துவமனை அறிக்கை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு சென்று, நல்லகண்ணுவின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

தோழர் நல்லகண்ணு - கோப்புப்படம்
தோழர் நல்லகண்ணு - கோப்புப்படம் (@cpi)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 24, 2026 at 3:55 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு, 24 மணி நேர தொடர் அதிதீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், தமிழ்நாடு அரசியலின் மிக முக்கியமான ஆளுமையுமான ஆர். நல்லகண்ணு, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 101 வயதான ஆர்.நல்லகண்ணு, கடந்த சில ஆண்டுகளாகவே வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி எதிர்பாராத விதமாக வீட்டில் தவறி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பும் உண்டானதால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த அவர் வீடு திரும்பினார்.

ஆனால், அவருக்கு அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு திடீரென பாதிப்பு அதிகரித்தது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், மூத்த மருத்துவர்கள் அடங்கிய ஒரு சிறப்புக் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

குறிப்பாக, வயது முதிர்வு காரணமாக அவருக்கு சுவாசப் பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதால், அவருக்கு தேவையான உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, உடல் நிலையில் முன்னேற்றம் அடைவது குறைவாக உள்ளதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு சென்று, நல்லகண்ணுவின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நல்லகண்ணு (வயது 101) நோய்த்தொற்று மற்றும் இணை நோய்களால் ரத்த கொதிப்பு, சிறுநீரக கோளாறு, உணவை விழுங்க முடியாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பல்வேறு மருத்துவத் துறை நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 23.2.2026 அவருடைய உடல்நிலையில் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசக் கருவி சிகிச்சை மற்றும் மருந்துகள் பல்வேறு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப்போது அவரது உடல்நிலையை பல்வேறு சிகிச்சைகளின் மூலம் சீராக்க அதிதீவிர முயற்சியுடன், 24 மணி நேர அதிதீவிர தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.