ETV Bharat / state

சுங்கத்துறை பெண் அதிகாரிக்கு எதிரான வழக்கு - ஆலந்தூர் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தங்கம் கடத்தி வருவதற்காகவே இஸ்லாமிய பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதாக சுங்கத்துறை பெண் அதிகாரி கூறியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 10, 2026 at 10:52 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக சுங்கத்துறை பெண் அதிகாரிக்கு எதிரான வழக்கை 2 மாதத்தில் விசாரிக்க ஆலந்தூர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சபீனா என்பவர் தனது கணவர் முகமது உசேனுடன் கடந்த ஆண்டு இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா சென்றிருந்தார். இதன் பின்னர், குவைத் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சென்னைக்கு திரும்பிய சபீனாவை, விமான நிலையத்தில் பணிபுரியும் சுங்கத்துறை பெண் அதிகாரி ஒருவர் சோதனையிட்டுள்ளார்.

சோதனையின் போது, இஸ்லாமிய உடையில் இருந்த சபீனாவை பார்த்து, தங்கம் கடத்தி வருவதற்காகவே இஸ்லாமிய பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவதாகக் கூறி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இஸ்லாமிய பெண்களை அவமானப்படுத்தியதாக சுங்கத்துறை பெண் அதிகாரிக்கு எதிராக சபீனா ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருவதால், விசாரணையை விரைந்து முடிக்க ஆலந்தூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரி சபீனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, பெண் அதிகாரி இஸ்லாமிய பெண்களை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல், எதிர்த்து கேள்வி கேட்டால் தங்கம் கடத்தி வர உதவி செய்ததாக தன் மீது பொய் வழக்கு போடப்போவதாக மிரட்டியதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு' - பிரதமருக்கு ஸ்டாலின் முக்கிய கோரிக்கை

இதையடுத்து சுங்கத்துறை பெண் அதிகாரிக்கு எதிரான வழக்கை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று ஆலந்தூர் நீதிமன்றத்துக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்.