ETV Bharat / state

ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.21 லட்சம் கொள்ளை: 'ஒரே பாணி'யில் கைவரிசை - கிளம்பிய தனிப்படை

இந்த இரண்டு சம்பவங்களிலும் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டிங் மெஷின் கொண்டு உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமராவிலும் கறுப்பு பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 28, 2026 at 11:52 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் அடுத்தடுத்து நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை சம்பவங்களில் ஒரே பாணியில் கைவரிசை காட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் வட மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி- சிப்காட் பைபாஸ் சாலையில் ஒரு தனியார் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இந்நிலையில், இந்த ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு கிடப்பதாக அருகில் உள்ள கடைக்காரர், நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

இதன்பேரில் அங்கு வந்த போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது ஏடிஎம் இயந்திரம் 'கேஸ் கட்டிங்' மெஷின் கொண்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், ஏடிஎம் அறையில் இருந்த சிசிடிவி கேமரா கருப்பு பெயிண்ட் அடித்து மறைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

இதையும் படிங்க: 'நிதி இல்லாமல் பதவி எதற்கு?' மாநகராட்சிக் கூட்டத்துக்கு கறுப்பு உடையுடன் வந்த விசிக, பாஜக உறுப்பினர்கள்

இதையடுத்து, வங்கி நிர்வாகத்திற்கு போலீசார் தகவல் அளித்தனர். இதையடுத்து, வங்கி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு தனியார் வங்கியின் ஏடிஎம் உடைக்கப்பட்டு ரூ. 9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

ஒரே பாணி

இந்த இரண்டு சம்பவங்களிலும் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டிங் மெஷின் கொண்டு உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமராவிலும் கறுப்பு பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. இதனை வைத்து, இந்த இரு கொள்ளை சம்பவங்களிலும் ஒரே கும்பல்தான் ஈடுபட்டுள்ளது என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், வட மாநில கும்பல்தான் இந்த பாணியில் கொள்ளையடிக்கும் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கும்மிடிப்பூண்டி போலீசாரும், காஞ்சிபுரம் போலீசாரும் கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனித்தனியாக தனிப்படைகளை அமைத்து பீகார், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.