ETV Bharat / state

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தொடங்கியது மாணவர் சேர்க்கை

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை துவக்கம்
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று துவக்கம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 2, 2026 at 4:16 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி இன்று தொடங்கி வைத்தார்.

தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை, ஒவ்வொரு பள்ளியிலும் 1.3.2026 முதல் தொடங்கிட மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும், அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்தக் குடியிருப்புப் பகுதிகளில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க செய்ய வேண்டும். அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர விரும்பும் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு அல்லாது பிற வகுப்புகளுக்கு சேர விரும்பினாலும் சேர்க்க வேண்டும்.

அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைத்தார்
அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைத்தார் (ETV Bharat Tamil Nadu)

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள், திறன் வகுப்பறைகள் (Smart Class Rooms), உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (HI-Tech Labs), டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கம்ப்யூட்டர் சார் அடிப்படை அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தும் TN - SPARK திட்டம் என மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு கல்வித் திட்டம் குறித்தும், உதவித் தொகைகள் போன்றவை குறித்தும் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி: சென்னையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் 3வது நாளாக ரத்து

அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட குறைந்தபட்சம் 50 மாணவர்களைக் கூடுதலாக சேர்க்கை செய்யும் அரசுப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவித்து 2026-27 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் கணிசமான அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தினை அதிகரித்திட வேண்டும்” என மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று துவக்கி வைத்தார்.