ETV Bharat / state

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் யாருக்கு வேண்டும்? அரசு ஊழியர்கள் அதிரடி

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தொடர்பாக பொதுக்குழுவைக் கூட்டி முடிவு எடுக்காமல், தன்னிச்சையாக முடிவெடுத்ததை ஏற்க முடியாது தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைமைச் செயலக சங்கத்தை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள்
தலைமைச் செயலக சங்கத்தை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 7:19 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு வரவேற்பு அளித்த தலைமைச் செயலக சங்க நிர்வாகிகளை கண்டித்து தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், தொகுப்பு ஊதியம், பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக, ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சமீபத்தில், அந்த குழு தனது முழு அறிக்கையை தமிழக அரசிடம் வழங்கியிருந்தது.

இதற்கிடையே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, ஜோக்டோ ஜியோ அறிவித்தது. மேலும், தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் 3 அமைச்சர்கள் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால், போராட்டம் அறிவிக்கப்பட்ட அதே நாளில் நடக்கும் என ஜாக்டோ ஜியோ தெரிவித்திருந்தது.

தலைமைச் செயலக சங்கத்தை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள்
தலைமைச் செயலக சங்கத்தை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள் (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக, பழைய ஓய்வூதிய திட்டப் பலன்களை வழங்கக் கூடிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலக ஊழியர்கள் சங்க தலைவர் வெங்கடேசன் மற்றும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்திருப்பதன் மூலம், எங்களின் 23 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் கொண்டு வந்த முதலமைச்சருக்கு நன்றி” என கூறியதும் மட்டுமல்லாமல் தொடர் வேலை நிறுத்தம் போராட்டத்தையும் ஒத்திவைத்தனர். மேலும், அறிவிப்பு வெளியான உடனேயே தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நன்றி தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க: இன்னும் 2 வாரத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணை - அப்டேட் கொடுத்த அரசு

இந்நிலையில், இன்று (ஜன.8) தலைமைச் செயலக ஊழியர்கள், தலைமைச் செயலக சங்க நிர்வாகிகளை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு கொண்டு வந்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தொடர்பாக பொதுக்குழுவைக் கூட்டி முடிவு எடுக்காமல், தன்னிச்சையாக முடிவெடுத்ததை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

தற்போது, முதலமைச்சர் அறிவித்திருக்கும் திட்டம் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் தங்களிடமே பணத்தை பிடித்தம் செய்வதை ஏற்க முடியாது என்பதால், பணி காலத்தில் எவ்வித பிடித்தமும் இல்லாமல் பணிநிறைவு பெற்றவுடன், ஓய்வூதியம் வழங்கும் படியாக உள்ள பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.