30 ஆண்டுக்கு பிறகு வந்த பேருந்து; நெகிழ்ச்சியில் உறைந்த மலை கிராம மக்கள்
முதல்முறையாக மலைச்சாலைகளின் வழியே தங்கள் கிராமங்களுக்கு வந்த பேருந்தை பார்த்த மலை கிராம மக்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

Published : February 27, 2026 at 10:37 PM IST
தேனி: ஆண்டிபட்டி அருகே மலை கிராமங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள சிங்கராஜபுரம் கிராமத்திலிருந்து கீழ பூசணூத்து, மேல பூசணூத்து உள்ளிட்ட மலை கிராமங்கள் வழியாக மஞ்சனூத்து சோதனை சாவடி வரை செல்லும் 6 மலை கிராமங்களுக்கான மலைச்சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பேருந்து சேவை இருந்த நிலையில், அதன் பிறகு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நகரப்பகுதிகளுக்கு செல்ல விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். குறிப்பாக மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர முடியாமல் சிரமப்பட்டனர். இந்நிலையில், கடமலைக்குண்டு பகுதியில் இருந்து சிங்கராஜபுரம், கீழப்பூசனூத்து வழியாக மஞ்சனூத்து சோதனை சாவடி வரை 6 மலை கிராமங்களுக்கு நாள்தோறும் 4 முறை சென்று வரும் வகையில் புதிய அரசு பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் இந்த பேருந்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். முதல்முறையாக மலைச்சாலைகளின் வழியே தங்கள் கிராமங்களுக்கு வந்த பேருந்தை பார்த்த மலை கிராம மக்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு கிராமத்திலும் திரண்டு வந்த பொது மக்கள், பட்டாசு வெடித்தும், பேருந்துக்கு மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

