''தீர்ப்பு வழங்கியதற்காக உயர் நீதிமன்ற நீதிபதிக்கே அச்சுறுத்தல்'' - ஆளுநர் ஆர்.என். ரவி பரபரப்பு பேச்சு
நீதிபதி ஒரு உத்தரவைப் பிறப்பிக்கும் போது, நீதிமன்றத்தைப் பற்றி பேசுகிறார்கள். உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய போதும் தடுக்கின்றனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி குறம்சாட்டினார்.

Published : January 8, 2026 at 8:02 PM IST
சென்னை: ஒரு தீர்ப்பு வழங்கியதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி அச்சுறுத்தப்பட்ட சம்பவம் நாட்டின் 75 ஆண்டு கால வரலாற்றில் ஒருபோதும் நடந்ததில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியாவின் 75 ஆவது ஆண்டு குடியரசு தின கருத்தரங்கம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், "நான் மாணவனாக இருந்தபோது, சென்னை பல்கலைக்கழகத்தைப் பற்றி நாங்கள் நிறைய கேட்போம். அது நாட்டின் முதல் 5 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருந்தது. நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள் இங்கு வந்து படிக்க வேண்டும் என்று கனவு கண்டனர். துரதிர்ஷ்டவசமாக சமீபத்திய பத்தாண்டுகளில் அது தனது பெருமையை இழந்துவிட்டது.
உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மட்டும் இல்லாமல் மற்ற பல்கலைக்கழகங்கள், குறிப்பாக மாநிலப் பல்கலைக்கழங்களுடன் ஒப்பிடும் போது, பல்வேறு தர வரிசைகளில் மிகக் குறைந்த இடங்களிலேயே இது இடம் பெறுகிறது. நமது மாநிலத்தில் உள்ள எத்தனை கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர்க் கல்வி நிறுவனங்கள் நாட்டின் முதல் 20 இடங்களில் இடம்பெறுகின்றன? அப்படிப்பட்டவை அரிதாகவே உள்ளன.
ஒன்று அல்லது இரண்டு மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒன்று அல்லது இரண்டு மற்ற பல்கலைக்கழகங்கள் மட்டுமே உள்ளன. மாநிலப் பல்கலைக்கழகங்களில் அரிதாகவே ஏதேனும் தர வரிசையில் இடம் பெறுகிறது. அந்த நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் திறமை குறைந்தவர்கள் என்பதல்ல. அவர்கள் எந்த மாணவரையும் போலவே திறமையானவர்களாகவும் புத்திசாலிகளாகவும் இருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக கல்விச் சூழல் சீர்கெட்டுள்ளது.
இந்தியாவில் அரசியலமைப்பு நான்கு தூண்களாக இருந்து நீதியையும், ஜனநாயகத்தையும் பாதுகாத்து வருகிறது. ஏழை எளிய மக்கள் பெரும்பாலான விவரங்களை செய்திகள் மூலமாக பார்க்கின்றனர்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் புனித ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு கார்த்திகை தீப நாளில் மலைத் தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை. திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற பலர் விடவில்லை. இதற்காக நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு உத்தரவைப் பிறப்பிக்கும் போது, நீதிமன்றத்தைப் பற்றி பேசுகிறார்கள். சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய போதும் நீங்கள் சென்று பாருங்கள் என்று தடுக்கின்றனர்.
கடந்த 75 ஆண்டு கால வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி ஒரு சூழ்நிலையை நாடு கண்டதில்லை. உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையென்றால் மேல்முறையீடு செல்லுங்கள். அரசியலமைப்புரீதியான வழிகள் உள்ளன. நமது வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை. தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்து நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சித்தனர்.
ஒரு தீர்ப்பு வழங்கியதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி அச்சுறுத்தப்பட்ட சம்பவம் நாட்டின் 75 ஆண்டு கால வரலாற்றில் ஒரு போதும் நடந்ததில்லை.
| இதையும் படிங்க: ''ரூ.3 ஆயிரம் கொடுக்கிறோம்.. ஓட்டு போடுங்க...'' - பகிரங்கமாக பேசிய அமைச்சர் துரைமுருகன் |
இன்றைக்கு 120 கோடி மக்களில் 5 சதவீதம் மட்டுமே மாறாமல் இருக்கிறார்கள். இந்தியா புதிய கண்டுபிடுப்புகளில் 3 ஆவது இடம் பிடித்துள்ளது. நாடு முழுவதும் 200 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்டுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அங்குள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் வளர்ச்சியை நோக்கி உள்ளனர். இந்தியாவை இன்னும் 25 ஆண்டுகளில் வலிமையுள்ள நாடாக மாற்ற கடுமையாக உழைக்க வேண்டும். எனவே நாம் இந்தியாவை பற்றி முழுமையாக படிக்க வேண்டும்" என்றார்.

