தவெக ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க ஆளுநர் மறுப்பு; நாளை பதவியேற்பு இல்லை
தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் விசிக உயர்நிலைக் கூட்டத்தில் விஜய்க்கு சாதகமான பதில் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Published : May 6, 2026 at 11:13 PM IST
By.எஸ்.உசேன்
சென்னை: தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுக்க மறுப்பு தெரிவித்துள்ளதால், திட்டமிட்டிருந்தபடி நாளை பதவியேற்பு விழா நடைபெறாது என்று தெரியவந்துள்ளது.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 34.92 சதவீத வாக்குகளுடன் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இருப்பினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெகவிடம் 108 இடங்கள் மட்டுமே உள்ளது. அதிலும் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளதால், அவற்றில் ஏதாவது ஒன்றை ராஜினாமா செய்தால் 107 இடங்கள்தான் கிடைக்கும். கூடுதலாக 11 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெக எந்த அணியுடன் கூட்டணி வைக்கும் என பல்வேறு யூகங்கள் எழுந்தன.
இதையடுத்து, காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் ஆதரவை தமிழக வெற்றிக் கழகம் கோரியது. இதையடுத்து, திமுக உடனான 10 ஆண்டுகால கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்துள்ளது.
இதையும் படிங்க.. எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை; யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிமுக
இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று சென்னை வந்தார். அவரை ஆளுநர் மாளிகையில் தவெக தலைவர் நேரில் சந்தித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு நேரில் கடிதம் கொடுத்தார்.
இதையடுத்து, நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை பதவியேற்பு விழா நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகின. இதற்காக விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே தவெக ஆட்சியைமக்க ஆளுநர் அழைப்பு விடுப்பு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் நாளை திட்டமிட்டபடி பதவியேற்பு விழா நடைபெறாது என தெரியவந்துள்ளது.
விசிக ஆலோசனைக் கூட்டம் ரத்து
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தபோதிலும் ஆட்சியமைக்க இன்னும் கூடுதல் இடங்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில், தவெகவின் கடிதம் குறித்து விளக்கம் அளித்த விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் அழைப்பு விடுத்திருப்பது தொடர்பாக விசிக முன்னனி தலைவர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, நாளை நடைபெற இருந்த விசிகவின் உயர்நிலைக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக விஜய், திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, விசிக உயர்நிலைக் கூட்டத்தில் விஜய்க்கு சாதகமான பதில் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க.. தோல்வியும் துரோகமும் திமுகவுக்கு புதிதல்ல; தவெகவுடன் காங்கிரஸ் கைகோர்த்தது குறித்து டி.ஆர்.பாலு காட்டம்
சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்ததில் இருந்து விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் இணைந்தே செயல்படுகின்றனர். இதனால், திருமாவளவன் எடுக்கும் முடிவே இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் விருப்பமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

