ETV Bharat / state

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு அரசு தயார் - அமைச்சர் வெங்கடரமணன்

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட ஏழு நாட்களுக்குள் நெல்லுக்கான தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வெங்கடரமணன் பேட்டி
அமைச்சர் வெங்கடரமணன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 29, 2026 at 10:46 PM IST

1 Min Read
Choose ETV Bharat

மயிலாடுதுறை: விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு அரசு தயார் நிலையில் உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சவூதி அரேபியாவில் தங்கி ஆழ்க்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக.29) நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் ஆகியோர் சவூதியில் உயிரிழந்த இரண்டு மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிவாரண உதவிகளை வழங்கினர். இந்நிகழ்வின் போது ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் துறைச் சார்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தேவைப்பட்டால் நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்கப்படும்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், "மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவைப் பருவத்தில் விளைச்சல் மற்றும் அறுவடை ஆகியவற்றை கணக்கில் கொண்டு தற்போது 33 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப 130 வரை கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

கொள்முதல் நிலையங்களில் தலா ஆயிரம் மூட்டைகளை சேமிக்கும் வகையிலான இடவசதி உள்ளது. நெல் வரத்து அதிகமானால் உடனடியாக நெல் மூட்டைகள் குடோன்களுக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரப்பதத்தை உறிஞ்சும் மற்றும் தூற்றும் இயந்திரங்கள், சாக்கு மூட்டைகள், தார்பாய்கள் தட்டுப்பாடு இன்றி கையிருப்பில் உள்ளது. விவசாயிகளிடம் லஞ்சம் அல்லது கமிஷன் கேட்கும் கொள்முதல் பணியாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றுப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஏழு நாட்களுக்குள் நெல்லுக்கான தொகை வழங்கப்படும்

கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகை ஏழு நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்பதால் இடைத்தரகர்களை நம்பி குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டாம். நடப்பாண்டு 9 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என வேளாண்துறை மூலம் கணிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கொண்டு வரும் நெல்மணிகளை கொள்முதல் செய்ய அரசு முழு தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட 46,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், குடோன்களில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோவையில் அடுத்தடுத்து வெடித்த 7 சிலிண்டர்கள் - 40 தகரக் கொட்டகைகள் தீயில் எரிந்து சேதம்