அரசு மருத்துவமனையில் OP சீட்டு பெற ஆதார் OTP கட்டாயம்; பொதுமக்கள் கடும் அவதி
மருத்துவ சேவையை நோயாளிகள் எளிதாகவும், விரைவாகவும் பெற வேண்டிய நிலையில், புதிய நடைமுறையால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

Published : July 7, 2026 at 3:32 PM IST
திருவண்ணாமலை: அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் (OP) சீட்டு பெற ஆதார் OTP கட்டாயம் என்ற புதிய நடைமுறையால் மருத்துவனைக்கு வந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் (OP) சிகிச்சைக்கான பதிவு நடைமுறையில், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை கட்டாயமாக பதிவு செய்யும் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக தொடர்ந்து 2-வது நாளாக நோயாளிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். OP சீட்டு பெறுவதற்காக மருத்துவமனை வளாகத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஆரணி அரசு மருத்துவமனை, ஆரணி நகரைச் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் முக்கிய அரசு சுகாதார மையமாக செயல்பட்டு வருகிறது. தினமும் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்காக இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் மருத்துவமனையை நாடி வருகின்றனர்.
இந்த நிலையில், OP சீட்டு பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை பதிவு செய்வது கட்டாயம் என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆதாருடன் மொபைல் எண் இணைக்காதவர்கள், பழைய மொபைல் எண்ணை பயன்படுத்துபவர்கள் அல்லது OTP உடனடியாக வராதவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரே பதிவு செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதால், OP சீட்டு வழங்கும் பணியும் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக நோயாளிகள் குற்றம்சாட்டினர்.
நேற்று காலை முதல் நீண்ட நேரம் வரிசையில் நின்றும் OP சீட்டு கிடைக்காததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பலர், இன்று மீண்டும் மருத்துவமனைக்கு வந்து வரிசையில் காத்திருந்தனர். "நேற்று சுமார் 4 மணி நேரம் காத்திருந்தும் சீட்டு கிடைக்கவில்லை. இன்று மீண்டும் வேலைகளை விட்டுவிட்டு வந்துள்ளோம். உடல்நிலை சரியில்லாத நேரத்தில் பல மணி நேரம் நிற்பது மிகவும் வேதனையாக உள்ளது" என்று நோயாளிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், OP சீட்டு வழங்கும் இடத்தில் பதிவு நடைமுறையில் ஏற்பட்ட தாமதம் குறித்து நோயாளி ஒருவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கும் அங்கு பணியில் இருந்த தலைமை செவிலியருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் OP பதிவு மையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. அங்கு இருந்த பிற நோயாளிகளும் இந்த சம்பவத்தால் அதிருப்தி தெரிவித்தனர்.
மருத்துவ சேவையை எளிதாகவும் விரைவாகவும் பெற வேண்டிய நிலையில், புதிய நடைமுறையால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக முதியவர்கள், பெண்கள் மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்படுவோர் அதிக சிரமத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
எனவே, மாவட்ட நிர்வாகமும் மருத்துவத் துறையும் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, கூடுதல் பதிவு கவுன்டர்கள் அமைத்தல், OTP இல்லாதவர்களுக்கு மாற்று பதிவு வசதி ஏற்படுத்துதல், கூடுதல் பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, நோயாளிகள் விரைவாக OP சீட்டு பெற்று சிகிச்சை பெறும் வகையில் உரிய தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

