தீபாவளி: ''24 மணி நேரம் பணியில் இருக்க வேண்டும்'' - அரசு மருத்துவர்களுக்கு அதிரடி உத்தரவு!
தீக்காயங்களில் இருந்து பாதுகாக்க போதிய ரத்தம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் அவசரநிலைகளை கையாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

Published : October 18, 2025 at 9:21 PM IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாளை (அக்டோபர் 19) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 20) ஆகிய நாட்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் சோமசுந்தரம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனர் சோமசுந்தரம் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நாளை (அக்டோபர் 19) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 20) ஆகிய நாட்களில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் dphepi@nic.in என்கிற மின்னஞ்சலுக்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும், மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை 9444340496, 8754448477 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம். நாளை 19.10.2025 மற்றும் நாளை மறுநாள் 20.10.2025 ஆகிய தேதிகளில் அனைத்து கூடுதல் ஆரம்ப சுகாதார மையங்களிலும் அழைப்பு பணியில் மருத்துவர்களுடன், 424 தொகுதி ஆரம்ப சுகாதார மையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்யவும்.
தீபாவளியை முன்னிட்டு தீ விபத்துகளால் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளும், பின் வருவனவற்றை உறுதி செய்ய வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் சிறிய தீக்காயங்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் திரவங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பெரிய காயங்கள் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மேலும் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளும், 3 ஆம் நிலை பராமரிப்பு மையங்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
| இதையும் படிங்க: ''நெல் மூட்டைகளை பாதுகாக்காமல் 'நானும் டெல்டாக்காரன்' என்பதில் என்ன இருக்கிறது?'' - பிரேமலதா விஜயகாந்த்! |
தீக்காயங்களில் இருந்து பாதுகாக்க போதிய ரத்தம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் அவசரநிலைகளை கையாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனர் சோமசுந்தரம் கூறியுள்ளார்.

