ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.37 கோடி மதிப்பிலான தங்கப் பசை பறிமுதல் - தூய்மைப் பணியாளர்கள் மூலம் கையாளப்பட்டது அம்பலம்

துபாயில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவர் கடத்தி வந்த தங்க பசையை விமான நிலைய தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்து வெளியே கொண்டு வந்து கொடுத்தால் பணம் கொடுப்பதாக கூறியது அம்பலமாகியுள்ளது.

தங்கப் பசை பறிமுதல்
தங்கப் பசை பறிமுதல் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 3:22 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர், தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்த 2.37 கோடி ரூபாய் மதிப்புடைய 1.640 கிலோ தங்க பசையை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெருமளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தனியார் பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும், விமானத்தில் இருந்து இறங்கி குடியுரிமை சோதனைக்கு சென்றனர்.

அப்போது குடியுரிமை சோதனைக்கு செல்லும் பகுதி அருகே இருக்கும் கழிவறை பக்கத்தில், சந்தேகத்திற்கு இடமாக சென்னை விமான நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபடும் இரண்டு நபர்கள் நின்று கொண்டு இருந்துள்ளனர்.

இதனை கவனித்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் இருவரையும் அழைத்து விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு பணி எங்கு ஒதுக்கப்பட்டது என விசாரணை நடத்தியபோது அவர்களுக்கு தரைதளத்தில் பணி ஒதுக்கப்பட்டிருந்ததையும், மேல் தளத்தில் அவர்களுக்கு பணி ஒதுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் ஏன் மேல்தளத்திற்கு வந்தீர்கள் என சுங்கத்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் பதில் கூற முடியாமல் திருத்திருவென முழித்துள்ளனர். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இருவரையும் அழைத்துக் கொண்டு விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது இருவரும் தாங்கள் அணிந்திருந்த ஷூவுக்குள் கருப்பு நிற டேப் சுத்தப்பட்ட ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

சுங்கத்துறை அதிகாரிகள் அதை எடுத்து பார்த்தபோது, அதனுள் தங்க பசை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இரண்டு தூய்மைப் பணியாளர்களிடம் இருந்து 1.640 கிலோ தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2.37 கோடி என கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் கைது செய்த சுங்க அதிகாரிகள் அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: ஆகஸ்ட் மாதத்தில் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை - கணக்கில் வராத ரூ.1.21 கோடி ரொக்கம் பறிமுதல்

விசாரணையில் துபாயில் இருந்து சென்னை வந்திருந்த பயணி ஒருவர், இந்த தங்க பசை கவரை விமான நிலையத்திற்கு வெளியே எடுத்து வந்து கொடுத்தால் உங்களுக்கு பணம் கொடுக்கப்படும் என அதை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அந்த பயணி குடியுரிமை சோதனை முடிந்து வெளியே சென்றுவிட்டதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த அந்த கடத்தல் ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை விமான நிலைய சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த தூய்மைப் பணியாளர்களுக்கும், தங்கம் கடத்தல் கும்பலுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்று கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.