தீபாவளி பண்டிகை எதிரொலி: எட்டயபுரம் சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
எட்டயபுரம் ஆட்டுச் சந்தைக்கு கிராமப்புறங்களில் இருந்து ஆடுகள் கொண்டு வரப்படுவதால் அதை வாங்க எப்போதும் பெரிய அளவிலான கூட்டம் சந்தைக்கு படையெடுக்கும்.

Published : October 18, 2025 at 8:47 PM IST
தூத்துக்குடி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டு சந்தை இயங்கி வருகிறது. இந்த ஆட்டுச்சந்தை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் செயல்படுவது வழக்கம். இங்கு நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் என தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை விற்பனை செய்ய விவசாயிகளும், அவற்றை வாங்குவதற்கு வியாபாரிகளும் வருவது வழக்கம்.
இந்த ஆட்டுச்சந்தையில் ஆண்டுதோறும் ரம்ஜான், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்கள் மற்றும் முகூர்த்த காலங்கள், கோயில் திருவிழாக்களையொட்டி ஆடுகள் விற்பனை அதிகமாக இருக்கும். அதிலும், பண்டிகை காலங்களில் சுமார் ரூ.6 கோடி முதல் ரூ.9 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெறும். மற்ற சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெறும்.
இந்த ஆண்டு தீபாவளி நாளை மறுநாள் கொண்டாடப்படுவதையொட்டி எட்டயபுரம் ஆட்டுச்சந்தை மிக அதிகளவில் வியாபாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எட்டயபுரம் பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக எதிர்பார்த்த அளவு விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வரவில்லை.
வியாபாரிகளும் அதிகளவில் வரவில்லை என்றாலும், ஆடுகள் விலை உயர்ந்தே காணப்பட்டது. ஆடுகளின் வயது மற்றும் தரத்தைப் பொறுத்து ரூ.3000 முதல் ரூ.30000 வரை ஆடுகள் விலை இருந்தது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ''எட்டயபுரம் ஆட்டுச் சந்தைக்கு வரும் ஆடுகள் கிராமப்புறங்களில் இருந்து கொண்டு வரப்படுவதால் அதற்கு தனி மவுசு இருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிகளவு ஆடுகள் வரும் என்று எதிர்பார்த்து வந்தோம். ஆனால் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக ஆடுகள் வரத்து குறைவாக இருந்தது மட்டுமின்றி விலையும் அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை குறைவு தான்.
கடந்த ஆண்டு ரூ.8 கோடி வரை விற்பனை நடந்த நிலையில் இந்த ஆண்டு சுமார் ரூ.6 கோடி வரை தான் விற்பனை நடந்து உள்ளது. தற்போது தொடர் மழையின் காரணமாக வியாபாரம் மந்தமாக உள்ளது. இதேப் போன்று ஆறுமுகநேரி வார சந்தையானது மிகவும் பெயர் பெற்றதாகும். இந்த சந்தையில் ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்படும். இந்த நிலையில் திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் இன்று காலை ஆறுமுகநேரியில் சனிக்கிழமை என்பதால் வாரச்சந்தை நடைபெற்றது.
| இதையும் படிங்க: ''நெல் மூட்டைகளை பாதுகாக்காமல் 'நானும் டெல்டாக்காரன்' என்பதில் என்ன இருக்கிறது?'' - பிரேமலதா விஜயகாந்த்! |
நாட்டு ஆடு, பண்ணை ஆடு, வெள்ளாடு ஆடு, செம்மறி ஆடு உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட ஆடுகள் வாரச்சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர். வழக்கமாகவே ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை நடக்கும்' என வியாபாரிகள் தெரிவித்தனர்.

