ETV Bharat / state

இந்தியா கூட்டணியில் திமுக நீடிக்கிறது - கிரிஷ் சோடங்கர்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் நாங்கள் கலந்து ஆலோசனை செய்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து முடிவு எடுக்கப்படும் என கிரிஷ் சோடங்கர் கூறினார்

காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் (கோப்புப் படம்)
காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் (கோப்புப் படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 3, 2026 at 9:42 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: இந்தியா கூட்டணியில் திமுக நீடிக்கிறது என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சி எனக்கு கோவா மாநில தலைவர் பொறுப்பை கூடுதலாக வழங்கி உள்ளது. இது பரிசு என்பதை விட, எனக்கு வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்பாகவே கருதுகிறேன். கட்சி மேலிடம் கொடுத்த அந்த பொறுப்பில் நான் சிறப்பாக பணியாற்றுவேன்.

பாஜக என்ன செய்கிறது? அவர்களின் சிந்தனை என்ன? என்பது சில நேரம் யாருக்கும் புரிவதில்லை. அவர்களின் செயல்பாடுகளும், எண்ணங்களும் முற்றிலும் வெவ்வேறான கோணங்களில் உள்ளன. பாஜக எந்த மாதிரி உத்திகளை பின்பற்றுகிறது? என்பது குறித்து எனக்கு தெரியவில்லை” என்றார்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினர் தேர்வு செய்ய இருப்பது குறித்து பேசிய கிரிஷ் சோடங்கர், ”தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் முதலமைச்சர் விஜயுடன் நாங்கள் கலந்து ஆலோசனை செய்து, முடிவு எடுக்க வேண்டி உள்ளது” என கூறினார்.

மேலும் அவர், “காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தமிழ்நாட்டின் மாபெரும் தலைவர்களில் ஒருவர். அவர் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து பேசி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சந்திப்பு தமிழ்நாட்டின் நலன்களுக்கும், வளர்ச்சிக்கும் மிக முக்கிய பங்களிப்பாகவும், பயனுள்ளதாகவும் அமையும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது” என்றார்.

இந்தியா கூட்டணி குறித்து பேசுகையில், ”இந்தியா கூட்டணி என்பது டெல்லியில் உள்ள மேலிட தலைவர்களால் கையாளப்படும் ஒரு விவகாரம். திமுக, இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறது. அதில் தற்போதைக்கு வேறு ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி எனக்கு தெரியாது” என கூறினார்.

இதையும் படிங்க: மாற்றம் காணும் தேசிய அரசியல்; இந்தியா கூட்டணியில் தவெக?

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளை பின்னுக்கு தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றியது. மேலும் திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ் கட்சி, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. தொடர்ந்து தவெக அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவருக்கு அமைச்சர்கள் பதவியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் திமுக, இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாகவே நீடிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார்.