தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? - வெளிப்படையாக மறுக்க மறுத்த கிரிஷ் சோடங்கர்
தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று செல்வப்பெருந்தகை வெளிப்படையாக கூறியபோதிலும், கிரிஷ் சோடங்கர் வெளிப்படையாக கூற மறுத்துவிட்டார்.

Published : February 28, 2026 at 6:25 PM IST
சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என கிரிஷ் சோடங்கர் வெளிப்படையாக கூற மறுத்திவிட்டார்.
சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைப்பெறவுள்ள நிலையில் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திமுக கடந்த 22ஆம் தேதி தொகுதி பங்கீடு குழுவை அமைத்தது. தொடர்ந்து தனது கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு குழு தொடர் பேச்சுவார்தைகளை நடத்தி வருகிறது. இன்றைய தினம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீடு குழு, அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, முக்குலத்தோர் புலிப்படை கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆட்சியில் பங்கு கேட்டு நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்பி வந்த காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் இன்று முதல்முறையாக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியது. சுமார் ஒரு மணிநேரமாக நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கேட்ட தொகுதி எண்ணிக்கையை திமுக ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
| இதையும் படிங்க: நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக ஒட்டப்பட்ட போஸ்டர் - கடும் அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் |
திமுக உடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். எங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை கேட்டுள்ளோம். அவர்கள் ஆலோசித்து சொல்வதாக கூறியுள்ளனர். பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துள்ளது. மாநிலங்களவையில் ஒரு இடம் தருவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்” என்றார்.

அவரிடம் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கிரிஷ் சோடங்கர் கூறியது குறித்து கேட்டதற்கு, “தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கிரிஷ் சோடங்கரும் எங்கேயும் இதுபோன்று பேசவில்லை. தவறாக பேசினால் மான நஷ்ட வழக்கு போடுவோம். இதற்கு மேல் என்ன சொல்ல வேண்டும்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும், தங்கள் விருப்பத்தை கூறியுள்ளதாகவும், ஆட்சியில் பங்கு குறித்தும் பேசியிருப்பதாகவும் தெரிவித்தார்.
தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு, “திமுக அலுவலகத்தில் உள்ளோம். திமுகவுடன் தான் கூட்டணி தொடர்பாக பேசியுள்ளோம். அதை பற்றி கேளுங்கள்” என்று கூறிய அவர், தவெகவுடன் பேசவில்லை என்று வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்கவில்லை.

