திடீர் சந்திப்பு: கனிமொழியுடன் கிரிஷ் சோடங்கர் பேசியது என்ன?
ஆட்சியில் பங்கு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், முதலில் இடங்கள் தொடர்பாக இரண்டு தரப்பும் பேசுவார்கள் என மழுப்பலாக கிரிஷ் சோடங்கர் பதிலளித்துள்ளார்.

Published : February 23, 2026 at 10:25 PM IST
சென்னை: தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தொகுதி பங்கீடு குறித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மநீம, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இம்முறை தேமுதிகவும், திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திமுக அறிவித்து இதுவரை ஐயூஎம்எல், மதிமுக, மமக உள்ளிட்ட கட்சிகளிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.
தொடர்ந்து வருகிற 26 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், மக்கள் நீதி மய்யம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுடன் வரும் 27 ஆம் தேதியும் திமுக தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் சந்தித்து பேசியுள்ளார். தமிழக முதலமைச்சர் மற்றும் கே.சி.வேணுகோபால் சந்திப்பானது சுமார் 45 நிமிடம் நடைபெற்றது. இதில் சுமார் 10 நிமிடம் முதலமைச்சர், கே.சி. வேணுகோபால், கனிமொழி ஆகிய 3 பேர் மட்டும் தனியாக சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பில் கே.சி.வேணுகோபால் ராகுல் காந்தியின் எதிர்பார்ப்பு என்ன? எத்தனை தொகுதிகள் வேண்டும்? என்பதை பற்றி கூறியுள்ளார். இதன் பிறகு முதல்வர் கூறியதையும் ராகுல் காந்தியிடம் தெரிவிப்பதாக கே.சி.வேணுகோபால் கூறியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உடன் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது.

இதனை அடுத்து கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. நேற்று முதலமைச்சர் உடன் கே.சி.வேணுகோபால் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதில் எத்தனை தொகுதிகள்? என்பதில் இன்னமும் முடிவு எட்டப்படவில்லை. மாநிலங்களவை, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது'' என்றார்.
| இதையும் படிங்க: ''பரிசு, பணப்பட்டுவாடா'' - மதுரையில் 5 தொகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்; ஆட்சியர் பிரவீன் குமார் |
அப்போது செய்தியாளர்கள் ஆட்சியில் பங்கு குறித்து கேள்வி எழுப்பியபோது, ''முதலில் தொகுதிகள் எண்ணிக்கை இறுதி செய்ய வேண்டும். அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இரண்டு தரப்பு பேச்சுவார்த்தை குழுவும் அமர்ந்து பேசுவார்கள்'' என்றார்.

