மாமன்றத்தை கூட்டாவிட்டால் ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் குழு தலைவர் திரவியம் எச்சரிக்கை
கடந்த 56 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் மதிப்பும் மரியாதையும் மறைக்கப்பட்டது. எங்களது உரிமைகள் மறுக்கப்பட்டன. ஒரு அடிமை கூட்டம் போல் எங்களை நடத்தினார்கள். இப்போது எங்களுக்கு விடுதலை கிடைத்ததாக உணர்கிறோம்.


Published : May 27, 2026 at 11:39 AM IST
சென்னை: 31 ஆம் தேதிக்குள் சென்னை மாமன்றத்தை கூட்டாவிட்டால் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாமன்ற குழு தலைவர் திரவியம் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் காங்கிரஸ் மாமன்ற குழு தலைவர் திரவியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஒரு மாமன்ற உறுப்பினராக கடந்த 3 நாட்களாக மாநகராட்சி ஆணையரை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். ஆனால் என்னால் சந்திக்க முடியவில்லை.
ஒரு மாதம் மாமன்ற கூட்டம் கூட்டப்படவில்லை என்றாலே மக்கள் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதை நாடே அறியும். ஆனால் இங்கு கடந்த 3 மாதங்களாக மாமன்ற கூட்டம் கூட்டப்படவில்லை. தேர்தல் நடத்தை விதி முடிந்த நிலையில், இந்த மாதம் மாமன்ற கூட்டம் கூட்டப்பட வேண்டும். அது ஏன் இன்னும் கூட்டப்படவில்லை? என்று கேள்வி கேட்பதற்காக மேயர் மற்றும் ஆணையரை சந்திக்க வந்தேன். ஆனால் அவர்கள் இங்கு இல்லை” என்றார்.
தவெகவுடன் கைகோர்த்தது குறித்து பேசிய அவர், “தேர்தலுக்கு முன்பு விஜய் குறித்து விமர்சித்த தலைவர்களையும் அவர் முதலமைச்சரான பிறகு நேரில் சென்று சந்தித்தார். ஆனாலும் கூட பாதிக்கப்பட்ட தலைவர்கள் பைத்தியம் பிடித்தது போல் பேசுகின்றனர்.
கடந்த 56 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் மதிப்பும் மரியாதையும் மறைக்கப்பட்டது. எங்களது உரிமைகள் மறுக்கப்பட்டன. ஒரு அடிமை கூட்டம் போல் எங்களை நடத்தினார்கள். இப்போது எங்களுக்கு விடுதலை கிடைத்ததாக உணர்கிறோம். தமிழக அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்று 6 மாதங்களுக்கு முன்பே ராகுல் காந்திக்கு தெரியும். திமுகவிடம் சொத்தையா கேட்டோம்? எங்களது உரிமையையும் ஆட்சியில் பங்கையும் தான் கேட்டோம்” என்றார்.
குதிரை பேரம் குறித்த ஜோதிமணியின் பதிவு குறித்த கேள்விக்கு, “குதிரை பேரம் நடப்பதாக சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? குதிரை பேரம் நடத்தியதே திமுகவும், அதிமுகவும் தான். ஆனால் இது குறித்த ஜோதிமணியின் கருத்தை நான் பார்க்கவில்லை” என்று பதிலளித்தார்.
காங்கிரஸ் முதுகில் குத்தியதாக திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்த கேள்விக்கு, “உதயநிதி வந்ததனால் தான் திமுக கீழே சென்றுள்ளது. நீட் தேர்வு, எய்ம்ஸ் குறித்து அவர் பேசினார். ஆனால் அவர்கள் ஆட்சியில் ஏதாவது முடிவு கொண்டுவரப்பட்டதா? ராகுல் காந்தி குறித்து பேச இவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது என்றார்.
ஆட்சியில் பங்கு என்பதற்காக கூட்டணி முடிவு எடுக்கப்பட்டது என்றால், தவெக முதல் மாநாட்டிற்கு பிறகே கூட்டணி வைத்திருக்கலாமே என்று கேட்டதற்கு, “அப்போதே 80 சதவீத தொண்டர்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் கட்சியில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்களை அழைத்து பேசினார்கள். அவர்கள் தங்களது பதவியை காப்பாற்ற அந்த முடிவை (திமுக கூட்டணி) எடுத்தார்கள். அதன் காரணமாக தான் அன்றைய முடிவு தவறியது” என்று கூறினார்.
மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் எவ்வாறு செயல்பட போகிறது என்ற கேள்விக்கு, “இதுவரை 15 கோரிக்கைகள் வைத்திருக்கிறேன். ஆனால் இந்த மாநகராட்சி ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை. கூட்டணியில் இருந்தபோதே எங்களது கோரிக்கைகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. கூட்டணி கட்சி என்ற மரியாதையை கூட எங்களுக்கு கொடுக்கவில்லை. மாநகராட்சி அலுவலகத்தில் டீ குடிப்பதற்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டோம். அதைக் கூட கொடுக்கவில்லை.
இது குறித்து அப்போது அமைச்சர் கே.என். நேருவிடம் 5 முறை கேட்டிருக்கிறோம். அவர் கொடுத்துவிட்டார். ஆனால் இங்குள்ள அமைச்சர் (சேகர்பாபு) கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். அவர் தான் இங்கு மேயர், துணை மேயர் என மொத்த கண்ட்ரோலையும் கட்டுக்குள் வைத்திருந்தார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை (மா.சுப்பிரமணியன்) பார்ப்பதற்கு மூன்று நாட்களாக காத்திருந்தேன். ஆனால் ஒரு முறை கூட பார்க்க முடியவில்லை.
31 ஆம் தேதிக்குள் மாமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம். மாமன்ற கூட்டத்தை கூட்டாமல் விஜய் ஆட்சியை களங்கப்படுத்த பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன” என்றார்.

