ETV Bharat / state

நெல்லையை மிரள வைத்த இரட்டை கொலை வழக்கில் திருப்பம்: 7 பேர் அதிரடி கைது

இரட்டை கொலை சம்பவத்தை அடுத்து உயிரிழந்தவர்கள், காயம்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சமூகத்தினர் நாங்குநேரி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 3, 2026 at 8:10 AM IST

2 Min Read
Choose ETV Bharat

திருநெல்வேலி: நாங்குநேரி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சாலையில் சென்றவர்களை கத்தியால் வெட்டியதில் இருவர் பலியான நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்து கடம்போடு வாழ்வு என்ற ஊர் இருக்கிறது. இந்நிலையில், நேற்றிரவு (மார்ச் 2) 7.30 மணியளவில், 9 பேர் கொண்ட மர்ம கும்பல் இருசக்கர வாகனங்களில் திடீரென அந்த பகுதிக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை வழிமறித்த அந்த கும்பல், அவர்களை அரிவாளால் வெட்டியது. மேலும், அவர்களுடைய வாகனத்தையும் பறித்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, நாங்குநேரி பெரும்பத்து பகுதியை அடைந்த அவர்கள், அங்குள்ள ஒரு டீக்கடையின் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பாராத அங்கிருந்தவர்கள், அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனை பார்த்த அந்த ரவுடி கும்பல், அவர்களை விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் மாற்றுத்திறனாளியான ஜான் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயமடைந்த வடமாநில தொழிலாளி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவர்களை தவிர, பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி ஆகியோரும் படுகாயமடைந்தனர்.

அதோடு அந்த கஞ்சா போதை கும்பல் ஓயவில்லை. அந்த பகுதியிலிருந்து அடுத்து அருகிலுள்ள புளியங்குளம் கிராமத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு சசிகுமார் மற்றும் வீராங்குளத்தை சேர்ந்த கணேசன் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டினர். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்களில் நெல்சன் மற்றும் கணேசன் ஆகிய இருவருக்கும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் நாங்குநேரி மற்றும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: கால்பந்து உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்குமா?

கஞ்சா போதையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட கும்பல், அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அவர்களை பிடிக்க காவல்துறை சார்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்னிமலை பகுதியில் நடந்த கண்ணன் (21), வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த உச்சி மகாளி என்ற மிட்டாய் (20), நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (21), தென்னிமலை பகுதியைச் சேர்ந்த அந்தோணி மிக்கல் (18), சுபாஷ் என்ற சுப்பையா (19), கண்ணன் (19), கல்யாணி(19), நாங்குநேரி நம்பி நகர் பகுதியில் சேர்ந்த ராஜா ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.