திமுக அலுவலகத்திற்குள் புகுந்து விசிக பிரமுகர் கொலை
திமுக அலுவலகம் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த விசிக பிரமுகரை, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கொலை செய்து விட்டு தப்பியோடியது.

Published : August 28, 2026 at 5:34 PM IST
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர், திமுக அலுவலகத்துக்குள் புகுந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 37) என்ற மைனா குட்டி. இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளராக பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று, திருநீர்மலை அம்பேத்கர் சிலை பகுதியில் உள்ள திமுக மண்டல அலுவலகத்தில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 3 இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல், திமுக அலுவலகத்திற்குள் புகுந்து, அன்பழகனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர், அன்பழகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவத்தை கேள்விப்பட்ட உறவினர்கள், ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த அன்பழகனின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
| இதையும் படிங்க: மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் விழுந்து பெண் இறப்பிற்கு மின் கசிவு தான் காரணம் - உடற்கூராய்வு அறிக்கையில் தகவல் |
படுகொலை செய்யப்பட்ட அன்பழகன் என்ற மைனா குட்டி மீது மூன்று கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் அரங்கேறிய இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட காவல் துறை விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், தப்பிச் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

