சம்பள பாக்கி கேட்டு கொலைவெறி தாக்குதல் - பர்னிச்சர் கடை உரிமையாளர் உயிரிழப்பு; இருவர் கைது
கீரனூர் பைபாஸ் சாலையில், ஜெயராமன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கொலையாளிகளை கைது செய்தனர்.

Published : October 12, 2026 at 11:37 AM IST
புதுக்கோட்டை: சம்பள பாக்கி தகராறில் முன்னாள் ஊழியர்கள் தாக்கியதில் பர்னிச்சர் கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமயம் மெய்யப்பட்டியைச் சேர்ந்தவர் பிரம்மன் மகன் பிரபு (43). இவர் திருமயம் கடைவீதியில் பழனி ஆண்டவர் பர்னிச்சர் என்ற கடையை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று திருமயம் சந்தைப்பேட்டையில் உள்ள அவரது குடோனில் பிரபு பொருட்கள் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பிரபு, கடையில் ஏற்கனவே வேலை பார்த்த ஊழியர்களான கரூர் மாவட்டம், திட்டகுடியைச் சேர்ந்த அய்யா துரை (28), குளித்தலை கார்த்திக் (30) ஆகியோர் பிரபுவிடம் சம்பளப் பாக்கியை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது
வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த இருவரும் பிரபுவை கைகளால் தாக்கியுள்ளனர்.
இதில் ஊழியர்கள் கையில் அணிந்திருந்த வெள்ளி காப்பு மூலம் பிரபுவின் தலை மீது பலமாக அடி விழுந்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே பிரபு மயங்கி விழுந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், பிரபுவை மீட்டு உடனடியாக திருமயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பிரபு ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அதேசமயம் பிரபுவின் உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் தென்படவில்லை என டாக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரபுவை தாக்கியதாக கூறப்படும் துரை, கார்த்திக் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். பலியான பிரபுவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் முடிக்கி விடப்பட்ட நிலையில், கீரனூர் பைபாஸ் சாலையில், தனியார் உணவகம் அருகே, ஜெயராமன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
| இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் மோதியதில் 2 பேர் தூக்கி வீசப்பட்டு விபத்து - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் |
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், திருமயத்தில் நடந்த கொலையில் சம்பந்தப்பட்டவர் என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இரண்டு பேரையும் போலீசார் மடக்கி பிடித்து, கைது செய்து, திருமயம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பள பாக்கி காரணமாக பர்னிச்சர் கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

