ETV Bharat / state

உலகை உலுக்கிய நேபாள பெரு வெள்ளம் - தேனி முதல் காஞ்சிபுரம் வரை கண்ணீர் குரல்கள்

நேபாளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்களின் விவரங்களை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் சேதமடைந்த பகுதிகள்
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் சேதமடைந்த பகுதிகள் (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 27, 2026 at 7:00 PM IST

4 Min Read
Choose ETV Bharat

சென்னை: நேபாளத்தின் ராசுவா மாவட்டம்.... நேற்று காலை 9 மணி வரை அமைதியாக இருந்த அந்த இடம் அடுத்த சில நிமிடங்களில் உருக்குலைந்து போனது. காரணம் இமயமலையில் இருந்து திடீரென கரைபுரண்டு வந்த வெள்ளம் அந்த பகுதியில் இருந்த வீடுகள், விடுதிகள், வாகனங்கள் என அனைத்தையும் அடித்து சென்றது. மிகவும் உறுதியான பாலங்கள், நீர்மின் உற்பத்தி நிலையங்களையும் விட்டு காட்டாற்று வெள்ளம் விட்டு வைக்கவில்லை.

நேபாளத்தில் நிகழ்ந்த இந்த துயரம் தமிழ்நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து 2 குழுக்களாக ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் இந்த பெருவெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். கும்பகோணத்தில் இயங்கி வரும் சூப்பர் யாத்ரா டூரிஸ்ட் சர்வீஸ் மூலம் 57 பேரும், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற நிறுவனம் மூலம் 49 பேர் என மொத்தம் 106 பேர் நேபாளத்திற்கு சென்றுள்ளனர். அவர்களில் 3 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள்.

கும்பகோணத்தில் இருந்து சென்ற குழுவினர், நேற்று காலை 3 வேன்களில் கைலயாய யாத்திரை சென்றுள்ளனர். நேபாளம் - சீனா எல்லை அருகே சென்று கொண்டிருந்த போது வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வேன்களும் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு வேனில் பயணம் செய்த 20 பேர் தப்பித்து கரை ஒதுங்கி உள்ளனர். மீதமுள்ள இரண்டு வேன்களில் பயணம் செய்த 37 பேர் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

நேபாளத்தில் சிக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம்

கும்பகோணத்தில் இருந்து யாத்திரை சென்ற குழுவில், உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீபதி சிவஞானமும் இடம்பெற்றிருந்தார். மயிலாடுதுறையை சொந்த ஊராகக் கொண்ட அவர், அதே பகுதியைச் சேர்ந்த 6 பேருடன் சென்றுள்ளார். அவர்களின் நிலைமை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

இதற்கிடையே, பெரு வெள்ளத்தில் இருந்து உயிர் தப்பியவர்களின் புகைப்படங்களை மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராகவன், 7 பேரின் வீடுகளுக்கும் சென்று காண்பித்தார். அவர்களில், ரத்தினகுமார், பூங்குழலி, மணிமேகலை ஆகிய 3 பேரின் படங்கள் இருந்ததால் அவர்களின் உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும், ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட 4 பேரின் நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

இதையும் படிங்க: நேபாள வெள்ளப்பெருக்கு: ஓய்வுப் பெற்ற நீதிபதி உள்பட 4 பேர் மாயம் - அரசு உதவியை நாடும் குடும்பத்தார்

தேனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மாயம்

தேனி மாவட்டம், கோடாங்கிபட்டியை சேர்ந்த செல்வத்தின் குடும்பமும் நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ளது. செல்வம், அவருடைய மனைவி சித்ராதேவி, தாய் சரஸ்வதி ஆகிய 3 பேரும், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகாதேவ் கைலாசா யாத்திரை ஏஜென்சி மூலம் நேபாளம் சென்றுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர்களை கண்டறிந்து மீட்டுத்தரக் கோரியும், அவர்களின் குடும்பத்தினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: தேனியில் இருந்து சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மாயம் - மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

காஞ்சிபுரம் உறவினர்கள் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் இருந்து மீனாட்சி, சந்திரன், அருணாச்சலம், லதா பானுமதி, சரஸ்வதி, கோபால் ஆகியோர் குரோம்பேட்டை மகாதேவ் கைலாசா யாத்திரை ஏஜென்சி மூலம் நேபாளம் சென்றுள்ளனர். அவர்கள் 6 பேரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகாவை சந்தித்து உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: நேபாளம் சென்ற 6 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

டிராவல்ஸ் உரிமையாளர் மகனும் சென்றுள்ளார்

சென்னையில் இருந்து சென்ற 49 பேரில் குரோம்பேட்டையை சேர்ந்த சத்யநாராயணன், விக்ரமன், மஞ்சுளா, வேழவேந்தன் ராஜலட்சுமி, அமுதா, கிஷோர் ஆகிய ஏழு பேர் அடங்குவர். இவர்களுடன் சேர்த்து 49 பேரையும் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மகன் சத்ய நாராயணன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவரையும் தொடர்பு கொள்ள முடியாததால் அவரது உறவினர்கள் தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஈஷா மையத்தை சேர்ந்தவர்கள்

கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து சென்றவர்களும் நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ளனர் என்று அதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். 770 பேர் சுற்றுலா சென்ற நிலையில், 80 பேரின் நிலை குறித்து அறிய முடியாமல் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் வெளிநாட்டினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஈஷா-வில் இருந்து சென்று சிக்கியவர்கள் வெளிநாட்டவர்கள் - ஜக்கி வாசுதேவ் வீடியோ வெளியீடு

சட்டப் பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்

நேபாள பெருவெள்ள பாதிப்பு, தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

நேபாள பெரு வெள்ளம்
நேபாள பெரு வெள்ளம் (ETV Bharat Tamil Nadu)

அதற்குப் பதில் அளித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிய 20 தமிழர்கள், திம்ரே ஆர்ம்டு போலீஸ் ஃபோர்ஸ் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொறு மணி நேரத்திற்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாறி மாறி வருவதால், கும்பகோணத்தில் இருந்து சென்றவர்களில், 34 பேரின் தகவல்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் உள்ள நிறுவனம் மூலம் சென்ற 49 பேரையும் கண்டறிந்து மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: நேபாளத்திற்கு தமிழர்கள் 103 பேர் பயணம் செய்துள்ளனர் - பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

4 அமைச்சர்கள் டெல்லி பயணம்

இதற்கிடையே, நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட நான்கு அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்ப முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் மற்றும் அயலகத் தமிழர்நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை இயக்குநர் சதீஸ் ஆகியோர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டு, மீட்புப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிட உள்ளனர்.

இதையும் படிங்க: நேபாள துயரம்: டெல்லி விரையும் 4 அமைச்சர்கள் - முதலமைச்சர் விஜய் உத்தரவு

நேபாளம் விரையும் அதிகாரிகள் குழு

தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழுவினர் நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க உள்ளனர்.

மீட்கப்பட்டுள்ள 20 தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்திடவும், மேலும் தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையினைக் கண்டறிந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்திடவும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிடவும் அவர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட 21 தமிழர்களின் விவரம்

இந்நிலையில், நேபாளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்களின் விவரங்களை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ளார். அவர்கள் கும்பகோணத்தில் இருந்து சென்றவர்கள் ஆவர்.

இதையும் படிங்க: நேபாளத்தில் இதுவரை மீட்கப்பட்ட 21 தமிழர்களின் விவரங்களை வெளியிட்டது மத்திய அரசு

300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

நேபாள பெருவெள்ளத்தில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி 335 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 288 இந்தியர்கள் உள்பட 1400 பேர் மாயமாகி இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.