ETV Bharat / state

முதலமைச்சர் விஜய் பெயரில் மோசடி- பொதுமக்களுக்கு சைபர் கிரைம் அறிவுறுத்தல்

மோசடி காணொளிகளில் குறிப்பிடப்படும் தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்புக் கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு சிபிசிஐடி சைபர் கிரைம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம்
குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 7:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் பெயரில் ஏஐ தொழில்நுட்பத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் மோசடி வீடியோ குறித்து தமிழ்நாடு சிபிசிஐடி சைபர் கிரைம் காவல்துறையினர், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யின் பெயரில் அறக்கட்டளை நடத்தப்படுவதாகக் கூறி, விஜய் பேசுவதுபோல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழ்நாடு காவல்துறையின் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவும், இதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சர் பேசுவதுபோல் உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோவைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சரைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் மோசடி காணொளி பரப்பப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சிபிசிஐடி சைபர் கிரைம் செல் ஆய்வாளர், சமூக வலைதளங்களில் நடைபெறும் சைபர் குற்றங்கள் தொடர்பாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பேசுவதுபோல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி ஒன்று பரப்பப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

இந்தி மொழியில் இடம்பெற்றிருந்த அந்த காணொளியில் பொதுமக்களுக்கு ஏதேனும் பண உதவி தேவைப்பட்டால் குறிப்பிட்ட வாட்ஸ் அப் எண்ணை தொடர்புக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சந்தேகத்திற்கிடமான இந்த மோசடி காணொளி குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஆய்வாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் இன்று (செப்.01) வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பொய்யாக உருவாக்கப்பட்ட அந்த காணொளி தொடர்பான போலியான சமூக வலைதளக் கணக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய பதிவுகள் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக மெட்டா நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் அந்த போலி காணொளியை அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையில் தமிழ்நாடு முதலமைச்சரின் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற பல்வேறு செயற்கை நுண்ணறிவு காணொளிகள், ஃபேஸ்புக் மட்டுமின்றி பிற சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. மேலும், இதுபோன்ற காணொளிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஃபேஸ்புக் கணக்குகளில் இருந்து பகிரப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட நபர்களை விரைவாக அடையாளம் கண்டும், அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் இதுபோன்ற போலி காணொளிகளை அகற்றவும் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற மோசடி காணொளிகளில் குறிப்பிடப்படும் தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்புக் கொள்ள வேண்டாம். மேலும் அந்த காணொளிகளில் பகிரப்படும் வாட்ஸ் அப் குழுக்களில் இணையவோ அல்லது அவற்றின் மூலம் தெரிவிக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவோ வேண்டாம்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் டீப் ஃபேக் காணொளிகளில் தமிழ்நாடு முதலமைச்சரைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து வெளியிடப்படும் போலியான பதிவுகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

மேலும் இதுபோன்ற இணைய வழி மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இந்த தகவலை தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினரிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது