சென்னையில் காணாமல் போன 400 செல்போன்கள் அதிரடியாக மீட்பு - உரிமையாளர்கள் மகிழ்ச்சி
பொதுமக்கள் தங்களது செல்போன்கள் தொலைந்து போனால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிப்பதுடன், சிஇஐஆர் இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது

Published : August 28, 2026 at 3:10 PM IST
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் காணாமல் போன 400 செல்போன்கள், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
சென்னை பெருநகர காவல் திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டன. அந்தப் புகார்கள் சமுதாயப் பணி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில், திருவல்லிக்கேணி காவல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு மற்றும் சிறப்பு படை காவலர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அந்த செல்போன்களின் சர்வதேச மொபைல் சாதன அடையாள எண்ணான ஐஎம்இஐ (IMEI) எண்ணைக் கொண்டு, மத்திய உபகரண அடையாளப் பதிவேடு, சி.இ.ஐ.ஆர் இணையதளம் மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த செல்போன்களை பயன்படுத்தி வந்த நபர்களை காவல் குழுவினர் அடையாளம் கண்டு, விசாரணை நடத்தினர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த 400 செல்போன்கள் மீட்கப்பட்டன. அதன் விவரங்கள், செல்போன்களை தொலைத்த உரிமையாளர்களிடம் பெறப்பட்ட தகவல்களுடன் சரிபார்க்கப்பட்டன.
இதனையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீட்கப்பட்ட 400 செல்போன்களும் உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையாளர் ஜெயச்சந்திரன் பங்கேற்று, மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். தங்களது காணாமல் போன செல்போன்களை மீட்டு ஒப்படைத்த சென்னை பெருநகர காவல்துறை, சைபர் கிரைம் பிரிவு மற்றும் காவல் குழுவினருக்கு செல்போன்களை பெற்றுக்கொண்ட உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
| இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கு: தி.மு.க வேட்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு |
மேலும் செல்போன்களை கண்டறிந்து மீட்டுத் தந்த திருவல்லிக்கேணி சைபர் கிரைம் காவல் குழுவினரின் பணியை துணை ஆணையாளர் ஜெயச்சந்திரன் பாராட்டினார். தொடர்ந்து பொதுமக்கள் தங்களது செல்போன்கள் தொலைந்து போனால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிப்பதுடன், சிஇஐஆர் இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

