அலங்காநல்லூர், பாலமேட்டில் முகூர்த்தக்கால் நடும் விழா - காளைகள் மற்றும் வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தொடங்கி வைக்க உள்ளனர்.

Published : January 7, 2026 at 7:11 PM IST
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா, அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். குறிப்பாக, மதுரையில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலகப்புகழ் பெற்றவை. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் ஜன.15 ஆம் தேதியும், பாலமேட்டில் ஜன.16 ஆம் தேதியும், அலங்காநல்லூரில் ஜன.17 ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.
முகூர்த்தக்கால் நாட்டு விழா
இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கடந்த 5 ஆம் தேதி அவனியாபுரத்தில் முகூர்த்தக்கால் நாட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில், அலங்காநல்லூரிலும், பாலமேட்டிலும் இன்று (ஜன.7) முகூர்த்தக்கால் நாட்டு விழா நடைபெற்றது.
இதற்காக, அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, பிறகு முகூர்த்தக் கால் நடப்பட்டது. நிகழ்வின் போது அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், எம்.எல்.ஏ வெங்கடேசன், விழா குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அடிக்கல் நாட்டப்பட்டதை அடுத்து அலங்காநல்லூர் வாடிவாசலுக்கு வர்ணம் பூசுவது, கேலரி அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கவுள்ளன.

களைகட்ட போகும் களம்
ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக, மாடுகளின் உரிமையாளர்கள் காளைகளுக்கு தீவிர பயிற்சி கொடுத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளவுள்ள காளைகளுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட காளைகளுக்கான தகுதிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. அதே போல, காளையை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தற்காலிக வாடிவாசல் அமைத்து காளைகளைப் பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
முன்பதிவு தொடக்கம்
மதுரையில் நடக்கவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு டிராக்டர் வழங்கப்படவுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்படும். இந்நிலையில், காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு https://madurai.nic.in/ என்ற இணையதளத்தில் இன்று மாலை 5 மணி முதல் தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
டிராக்டர்கள் பரிசு
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, “உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. மேலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தொடங்கி வைக்க உள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கார் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், சிறந்த வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில், இந்த ஆண்டு டிராக்டர்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. முதன்முறையாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களிலும் டிஜிட்டல் திரையில் வீரர்கள் பிடிக்கும் மாடுகளின் எண்ணிக்கை உடனுக்குடன் ஒளிபரப்பு செய்யப்படும். குறிப்பாக, மாடுகளுக்கு அனுமதி வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்” என உறுதி தெரிவித்தார்.
| இதையும் படிங்க: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'திடீர்' டெல்லி பயணம் |
பாலமேட்டில் முகூர்த்தக்கால் நடும் விழா
அதேபோல, ஜனவரி 16 ஆம் தேதி நடக்கவுள்ள பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக, இன்று மஞ்சமலை ஆற்றில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதியில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரதனை செய்யப்பட்டு, முகூர்த்தக்கால் நடும் பணி நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி விழா குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக விழா மேடை, பார்வையாளர் மேடை அமைப்பது, இருபுறமும் தடுப்பு வேலி, ஜல்லிக்கட்டு காளைக்கான கலெக்ஷன் பாயிண்ட் அமைப்பது போன்ற பணிகள் நடைபெறவுள்ளன.

