ETV Bharat / state

வறுமையில் வாடும் தங்க மங்கை - முதல்வர் ஸ்டாலினிடம் உதவி கேட்கும் முன்னாள் வீராங்கனை

முன்னாள் தடகள வீராங்கனை பிரகாசி, இரண்டாம் உலகப் போரில் பணியாற்றிய சுதந்திர போராட்ட தியாகி T.M. தாமஸின் மகள் ஆவார்.

முன்னாள் தடகள வீராங்கனை பிரகாசி
முன்னாள் தடகள வீராங்கனை பிரகாசி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 10, 2026 at 9:51 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ராணிப்பேட்டை: தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற முன்னாள் தடகள வீராங்கனை பிரகாசி, அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கே சிரமப்படுவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, இரண்டாம் உலகப் போரில் பணியாற்றிய சுதந்திர போராட்ட தியாகி T.M. தாமஸ் அவர்களின் மகள் பிரகாசி (47). இவர் கபடி மற்றும் தடகளப் போட்டிகளில் தேசிய மற்றும் மாநில அளவில் தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். ஆனால், தற்போது அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகிறார்.

ஒரு காலத்தில் விளையாட்டு அரங்குகளில் சாதனைகள் புரிந்து பதக்கங்களால் கௌரவிக்கப்பட்ட இவர், தற்போது உணவுக்கும், தங்க நிரந்தர இடமின்றி அவதிப்பட்டு வருகிறார். இவரது உறவினர் பெறும் முதியோர் உதவித் தொகையான மாதம் ரூ.1200 மட்டுமே குடும்பத்தின் ஒரே வருமானமாக இருப்பதால், தனது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வீராங்கனை பிரகாசி கூறுகையில், “என் தந்தை இரண்டாம் உலகப் போரில் பணியாற்றியவர். நான் கபடி மற்றும் தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்டம், மாநில அளவில் தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளேன். தமிழ்நாட்டிற்காக விளையாடிய அந்த நாட்கள் இன்று கனவாக மாறிவிட்டது. இன்று நான் சாப்பிட உணவும், தலைசாய்க்க இடமும் இல்லாத நிலையில் உள்ளேன். என் உறவினர் பெறும் முதியோர் உதவித் தொகையான ரூபாய் 1200 தான் எங்களின் ஒரே வருமானம்.

அதைக் கொண்டு குடும்பத்தை நடத்துவது மிகவும் கடினமாக உள்ளது. எனது உறவினரின் வயதும், உடல்நலமும் காரணமாக நான் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். அரசுக்காகவும், மாநிலத்துக்காகவும் விளையாடி பெருமை சேர்த்த இவ்வாறு எந்த உதவியின்றி தவிப்பது மனவேதனை அளிக்கிறது.

தமிழ்நாடு அரசு, குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் என் நிலையை அறிந்து எங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கும், சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கும் அரசு வழங்கும் நலத்திட்டங்களில் என்னையும் இணைக்க வேண்டும்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

முன்னாள் தடகள வீராங்கனை பிரகாசி (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: மின்கசிவால் தீப்பற்றி எரிந்த வாஷிங் மெஷின் - மெக்கானிக் கூறும் முக்கிய அறிவுரைகள் என்ன?

1997ஆம் ஆண்டு சென்னை மேயர்ஸ் கப் போட்டியில் வென்று, அன்றைய சென்னை மாநகராட்சி மேயராக இருந்த மு.க.ஸ்டாலினின் கையால் பிரகாசி சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.