ஒரு உயிரைக் காப்பாற்ற அமானுஷ்யம் தேவையில்லை; சக மனிதன் மீதான பரிவே போதுமானது - ராம்நாத் கோவிந்த் உரை
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியப் பண்பான சகோதரத்துவத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். நமது பண்டைய தத்துவத்தின்படி, யாரும் தனிமையில் விரக்தியைச் சந்திக்கக்கூடாது என முன்னாள் குடியரசு தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Published : February 27, 2026 at 8:07 AM IST
சென்னை: ஒரு உயிரைக் காப்பாற்ற அமானுஷ்ய சக்திகள் தேவையில்லை. சக மனிதன் மீதான பரிவும் அக்கறையுமே போதுமானது என முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த 1986ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிநேகா தொண்டு நிறுவனமானது, 2026ஆம் ஆண்டில் தனது சேவையின் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனைப் போற்றும் வகையில், தற்கொலை தடுப்பு, மனநல விழிப்புணர்வு மற்றும் கனிவான அரவணைப்பு (Suicide Prevention, Mental Health Awareness and Compassionate Care) என்ற கருப்பொருளில் தேசிய மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்திய மனநல சங்கம் தற்கொலை தடுப்புக்கான சர்வதேச சங்கம் மற்றும் இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் ஆதரவுடன் இம்மாநாடு நடைபெறுகிறது. நேற்று (பிப். 26) தொடங்கி 28ஆம் தேதி வரை நடைப்பெறும் இம்மாநாட்டை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், “மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் கேட்கீப்பர் (Gatekeeper) பயிற்சிகளை பரவலாக ஊக்குவிக்க வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்கள், பள்ளி மற்றும் பணியிடங்களுக்கான மனநலத் திட்டங்கள் மற்றும் முதியோர்களுக்கான ஆதரவு சேவைகளை விரிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
மனநலம் குறித்த உரையாடல்களைத் இயல்பானதாக மாற்றி சமூகத்தில் உள்ள தேவையற்ற களங்கத்தை குறைக்க வேண்டும். ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் கொள்கை உருவாக்கத்தில் மனநலத் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

குடும்பங்களில் வெளிப்படையான உரையாடல்களை ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான பயிற்சிகளும், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே மனநலப் பாதிப்புகளைக் கண்டறிந்து பரிந்துரைக்கும் பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும்.
| இதையும் படிங்க: பாஜகவில் இருந்து 30 பேர் எம்எல்ஏக்கள்; வி.பி. துரைசாமி அமைச்சர் - நயினார் நாகேந்திரன் பேச்சால் சலசலப்பு |
பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான நலவாழ்வுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அதேபோல, தற்கொலை மற்றும் மனநலம் சார்ந்த செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நம்பிக்கை மற்றும் மீண்டு வருதலின் வெற்றிக் கதைகளை ஊடகங்கள் முன்னிலைப்படுத்த வேண்டும்.
மாற்றங்களை உற்றுநோக்கும் நண்பராக, செவிமடுக்கும் பெற்றோராக, நலம் விசாரிக்கும் சக ஊழியராக நாம் மாற வேண்டும். சில நேரங்களில் ஒரு உயிரைக் காப்பாற்ற அமானுஷ்ய சக்திகள் தேவையில்லை. சக மனிதன் மீதான பரிவும் அக்கறையுமே போதுமானது” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியப் பண்பான சகோதரத்துவத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். நமது பண்டைய தத்துவத்தின்படி, யாரும் தனிமையில் விரக்தியைச் சந்திக்கக்கூடாது. விரக்தியை விட நம்பிக்கை வலிமையானது, களங்கத்தை விட கருணை மேலானது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு உயிரையும் மதிக்கும் தேசத்தைக் கட்டமைப்போம்” என்றார்.
இம்மாநாட்டில் உலகளாவிய தற்கொலை விபத்துகளின் போக்குகள், சமூக மற்றும் உயிரியல் காரணிகள், ஊடகங்களின் பங்கு, பொது சுகாதாரம் மற்றும் கொள்கை ரீதியான தலையீடுகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடையேயான தற்கொலை எண்ணங்கள், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இதில் மனநல மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

