ETV Bharat / state

விவசாயியை கொன்ற வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை!

கொலை வழக்கில் முன்னாள் திமுக எம்எல்ஏ ஆயுள் தண்டனை பெற்ற இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் சிறைக்கு அழைத்து செல்லப்படும் குற்றவாளிகள்
நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் சிறைக்கு அழைத்து செல்லப்படும் குற்றவாளிகள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 10:46 PM IST

1 Min Read
Choose ETV Bharat

திருவண்ணாமலை: நிலத் தகராறில் விவசாயியை கொன்ற வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்திற்கு உட்பட்ட பெரிய செங்காடு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. விவசாயி. இவரது மனைவி பொன்னி. விவசாயி முனுசாமிக்கும், வந்தவாசி தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கமலக்கண்ணனுக்கும் இடையே நிலம் தொடர்பாக பகை இருந்து வந்துள்ளது.

இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு மே 15 இல் முன்னாள் திமுக எம்எல்ஏ கமலக்கண்ணனின் ஆட்கள் விவசாயி முனுசாமியை கட்டை மற்றும் அரிவாளால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து முனுசாமியின் மனைவி பொன்னி அளித்த புகாரின் அடிப்படையில், செய்யாறு பகுதிக்கு உட்பட்ட அனக்காவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதை தொடர்ந்து, திமுக முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன், மதியழகன், நந்தகோபால், இருசப்பன், பெருமாள், சுதாகரன் மற்றும் துரைமுருகன் ஆகிய ஏழு பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றதில் நடைபெற்று வந்தது.

இன்று இந்த வழக்கில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி மதுசூதனன் குற்றவாளிகளான திமுக முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் உட்பட ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

2014 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைதான திமுக முன்னாள் எம்எல்ஏ-விற்கு 12 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், கடந்த 2006 -2011 திமுக ஆட்சிக் காலத்தில் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினராக ஜெயராமன் பதவி வகித்தார். இவர் திடீரென இறந்தவுடன் இவரது மகன் ஆகிய கமலக்கண்ணனுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் திமுகவின் சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பயமோ, பாரபட்சமோ இல்லாமல் செயல்படுங்கள் - தமிழ்நாடு அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு