ETV Bharat / state

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வெங்கட்ராமன்

ஒரு நிலையான தலைமையின் கீழ் பணியாற்ற உள்ளதாகவும், தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார் வெங்கட்ராமன்.

மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த வெங்கட்ராமன்
மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த வெங்கட்ராமன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2026 at 4:20 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வெங்கட்ராமன், நிலையான குழப்பமற்ற தலைமையின் கீழ் பணியாற்ற என் மனம் ஆவலாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு ஆலந்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது அதில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனவர் வெங்கட்ராமன். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக செயல்பட்ட வெங்கட்ராமன், அவருடைய அதிமுக உரிமை மீட்புக் குழுவில் இணைந்து சென்னை புறநகர மாவட்ட செயலாளராக பணியாற்றினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற வெங்கட்ராமன், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவருடன் முன்னாள் அதிமுக மாவட்ட பொருளாளர் தனசேகரன், ஆலந்தூர் கிழக்கு அதிமுக வர்த்தக அணி செயலாளர் இளங்கோ, சென்னை மாநகராட்சி முன்னாள் அதிமுக கவுன்சிலர் ராஜேந்திரன், அதிமுக மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் ஜெய பிரதாப், ஆலந்தூர் கிழக்கு பகுதி எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மொசைக் பாபு, ஆடிட்டர் குமரகுரு உள்ளிட்டோர் இன்று திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்வில் திமுக சார்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியமில்லை - கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்த அமர்நாத் ராமகிருஷ்ணா மறுப்பு

திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ வெங்கட்ராமன் பேசியதாவது,

“கழக தலைவர் அண்ணன் (மு.க ஸ்டாலின்) திமுகவில் என்னை வரவேற்று ஆதரித்துக் கொண்டார். அவருடன் எப்போதும் இருப்பேன். நிலையான குழப்பமற்ற தலைமையின் கீழ் பணியாற்ற என் மனம் ஆவலாக இருக்கிறது. இன்று முதல் என் கழகப் பணியை சீரும் சிறப்புமாக செய்வேன். எனக்கு அளித்திருக்கிற இந்த வாய்ப்புகளுக்காக நன்றி கூறுகிறேன்” என தெரிவித்தார்.

அவரிடம் அதிமுகவில் இருந்து வெளியே வந்ததற்கான காரணம் என்ன? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அனைவருக்கும் அது தெரியும். ஒரு நிலையான தலைமையின் கீழ் பணியாற்ற உள்ளேன். தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்” என தெரிவித்தார்.