ETV Bharat / state

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு - விஜய் பிரச்சார வாகனத்தை தடயவியல் துறை அதிகாரிகள் 2 ஆவது நாளாக ஆய்வு

மத்திய தடயவியல் துறை அதிகாரிகள் காலை 11 மணிக்கு விஜய் பிரச்சார வாகனத்தை ஆய்வு செய்ய துவங்கி மதியம் 2 மணி வரை சுமார் 3 மணி நேரமாக அளந்து தடயங்கள் சேகரித்தனர்.

விஜய் வாகனத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்
விஜய் வாகனத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 10, 2026 at 5:32 PM IST

3 Min Read
Choose ETV Bharat

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக விஜய் பிரச்சார வாகனத்தை மத்திய தடயவியல் துறை அதிகாரிகள் 2 ஆவது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் விஜய் இரவு 7 மணிக்கு உரையாற்ற துவங்கும் போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் தமிழகத்தை சாராத இரு ஐபிஎஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் சி.பி.ஐ அதிகாரிகள் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக தமிழக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரணை அறிக்கையை பெற்று மொழிபெயர்ப்பு செய்யும் பணியை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை சிபிஐ சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டது.

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட வீடியோ, ட்ரோன் காட்சிகளை ஒப்படைக்குமாறு, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சம்மன் வழங்கினர்.

இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் பனையூர் அலுவலக நிர்வாகி குரு சரண் மற்றும் திருச்சி மண்டல வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அரசு உள்ளிட்ட 3 பேர் கரூர் சிபிஐ முகாம் அலுவலகத்தில் வீடியோ ஒளிப்பதிவு ஆதாரங்களை ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து கரூர் வேலுச்சாமிபுரத்தில் கரூர் நகர காவல் நிலையத்தின் மூலம் வழங்கப்பட்ட கூட்ட அனுமதி கடிதம் மற்றும் கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் உள்ளிட்டோர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி விளக்கங்களை அளித்தனர்.

பின்னர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கடந்த மாதம் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் 3 நாட்களாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி அதிகாரிகளிடம் கூடுதல் வாக்குமூலங்கள் மற்றும் விளக்கங்களை அளித்தனர். இதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் வரும் ஜனவரி 12 ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் சம்மன் வழங்கினர்.

இந்த நிலையில் நேற்று கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய தடயவியல் துறை அதிகாரிகள், கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை அளவீடு செய்து, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் நவீன கருவிகளை கொண்டு ஆய்வு செய்தனர்.

இன்று இரண்டாவது நாளாக, கரூர் சிபிஐ அலுவலகத்தில் முகாமில் உள்ள மத்திய தடவியல் துறை அதிகாரிகள் 6 பேர் விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய பேருந்தை, வரவழைத்து அதனை சுற்றி அங்குலம் அங்குலமாக அளந்து தடயங்களை சேகரித்தனர்.

இதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் பனையூர் அலுவலக நிர்வாகி குருசரண் மற்றும் திருச்சி மண்டல வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் அரசு மற்றும் விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் ஆகிய 3 பேர் இன்று கரூர் சிபிஐ விசாரணை அலுவலகத்தில் பேருந்துடன் விசாரணைக்கு ஆஜராகினர்.

மத்திய தடயவியல் துறை அதிகாரிகள் காலை 11 மணிக்கு விஜய் பிரச்சார வாகனத்தை ஆய்வு செய்ய துவங்கி மதியம் 2 மணி வரை சுமார் 3 மணி நேரமாக அளந்து தடயங்கள் சேகரித்தனர். மேலும் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் 3 மணிக்கு மேல் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பேருந்து ஓட்டுநரை இயக்க சொல்லி, அதனையும் வீடியோ ஒளிப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: விஜய்க்கு அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை - வருமான வரித்துறை வாதம்

மத்திய தடயவியல் துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கரூர் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தவெக தலைவர் விஜய் பிரசார வாகனம் கொண்டு வரப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் சில ஊடகங்களில் சிபிஐ அதிகாரிகள் விஜய் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்து கொண்டு வந்திருப்பதாக தவறான தகவல்கள் வெளியாகி உள்ளன என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.