"பொங்கலோ பொங்கல்"... தூத்துக்குடியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர்
ஒன்று கூடிப் பொங்கல் வைத்தது எங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் என்று வெளிநாட்டினர் கூறினர்.

Published : January 5, 2026 at 8:46 PM IST
தூத்துக்குடி: தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து மண் பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து வெளிநாட்டினர் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னையில் உள்ள “கிளாசிக் ரன்” (CLASSIC RUN) என்ற தனியார் சுற்றுலா நிறுவனம், கடந்த 17 வருடங்களாக வெளிநாட்டினர் பங்கு பெறும் “ஆட்டோ சேலஞ்ச்” (Auto Challenge) என்ற ஆட்டோ சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, இந்தாண்டு 18-வது வருடமாக ஆட்டோ சேலஞ்ச் சுற்றுலாப் பயணம், கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.
இதில், இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த 16 பெண்கள், 13 ஆண்கள் என மொத்தம் 29 பேர் கலந்துக் கொண்டுள்ளனர். இவர்கள் அணி, அணியாகப் பிரிந்து சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை ஆகிய பகுதிகளில் பயணம் மேற்கொண்டு, தூத்துக்குடி வந்தடைந்தனர்.
அங்கு, உப்பளங்கள், பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலயம், முத்துநகர் கடற்கரை ஆகியவற்றைப் பார்வையிட்டனர். தொடர்ந்து, சாயர்புரத்தில் உள்ள பிரம்ம ஜோதி பண்ணை தோட்டத்தில் பொங்கல் கொண்டாடுவதற்காக வருகை புரிந்தனர்.
பொங்கல் கொண்டாடுவதையொட்டி, தோட்டம் முழுவதும் கரும்பு, மஞ்சள் குலை, வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. பொங்கல் பண்டிகை கொண்டாட வந்த வெளிநாட்டவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து இருந்தனர்.
பொங்கல் கொண்டாட்டத்திற்கு வருகை புரிந்த வெளிநாட்டினர் அடுப்பு மூட்டி பொங்கல் பானை, பச்சரிசி, நாட்டு சர்க்கரை வைத்து ஒவ்வொரு அணியும் தனித்தனியாகப் பொங்கல் வைத்தனர். இதில், பானையில் பொங்கல் பொங்கி வரும்போது, தோட்டத்தில் பணிபுரிபவர்கள் செய்து காட்ட, “பொங்கலோ பொங்கல்” என கோஷமிட்டு வெளிநாட்டவர் குலவை சத்தமும் எழுப்பி அசத்தினர்.
பொங்கல் வைத்து முடிக்கப்பட்டதும், அந்தந்த அணியினர் அவர்கள் வைத்த பொங்கலை வரிசையாகத் தட்டில் வைத்தனர். வெளிநாட்டினர் வைத்த பொங்கலைச் சுவைத்துப் பார்த்த நடுவர்கள் முதல் மூன்று அணியைத் தேர்வு செய்தனர். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோடிகளுக்கு முதல் பரிசாக செவ்வாழையும், இரண்டாம் பரிசாக கோழிக்கோடு என்ற வாழைப்பழம், மூன்றாம் பரிசாக மட்டி என்ற வாழைப்பழத்தின் தார்கள் வழங்கப்பட்டன.
| இதையும் படிங்க: ஸ்லோ மோடில் தேர்தல் ஆணையம் - அதிமுக இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் புதிய மனு தாக்கல் |
இது குறித்து, சுற்றுலாவின் ஒருங்கிணைப்பாளர் பிரின்லி கூறுகையில், “வெளிநாட்டினர் நமது கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ஆட்டோ சேலஞ்ச் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்.
தொடர்ந்து, பொங்கல் கொண்டாடிய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டெரி தம்பதி கூறுகையில், “தமிழர்களின் கலாச்சாரம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. வேட்டி, சேலை அணியும் போது தனி மரியாதை கிடைக்கிறது. ஒன்று கூடிப் பொங்கல் வைத்தது எங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம்” என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரம் செல்லும் வெளிநாட்டினர், நாளை அவரவர் சொந்த நாட்டுக்குத் திரும்புகின்றனர்.

