நெல்லை மக்களை சுட்டெரித்த சூரியன்; செப்டம்பரில் முதன்முறையாக 105 டிகிரி வெப்பம் பதிவு
செப்டம்பர் மாதம் முழுவதுமே வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும் மழைப்பொழிவு மிகவும் குறைவாகவே இருக்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Published : September 1, 2026 at 7:23 PM IST
திருநெல்வேலி: வரலாற்றில் முதல்முறையாக நெல்லையில் 105 டிகிரி வெப்பம் பதிவான நிலையில், அனல் தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை பொழியும். குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில், தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாக பெய்யும். அதன் தாக்கமாக மேற்கு தொடர்ச்சி மலையடிவார மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்யும். இந்த மழைதான் விவசாய மற்றும் குடிநீர் தேவைக்கு கை கொடுத்து வந்தது.
ஆனால் இந்த ஆண்டு எல் நினோ உள்ளிட்ட காரணங்களால் பருவ மழை பொய்த்துள்ளது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், ஓரிரு நாட்கள் மட்டுமே மழைப்பொழிவு இருந்தது. அதன் பிறகு வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இடையில் ஜூலை, ஆகஸ்ட், மாதங்களில் சில நாட்கள் மட்டுமே மழைப்பொழிவு இருந்தது.
பெரும்பாலான நாட்களில் வெயில் அதிகரித்தே காணப்பட்டது. குறிப்பாக, கோடை காலங்களில் 100 டிகிரி அளவுக்கு வெயில் பதிவானதால் மக்கள் அனலை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் பருவமழை சரிவர பெய்யாததால், திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பவில்லை . வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலங்களில், பாபநாசம், காரையாறு, மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகள் முழு கொள்ளளவு எட்டும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை கை கொடுக்காததால் அணைகள் வறண்டு காணப்படுகிறது.
| இதையும் படிங்க: கிடுகிடுவென உயர்ந்த வெங்காயம், சர்க்கரை விலை - காபி, பண்டம் கூட போட முடியவில்லை; இல்லத்தரசிகள் கண்ணீர் |
இது போன்ற சூழ்நிலையில், செப்டம்பர் மாதத்தில் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இன்று 105 டிகிரி அளவுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் பதிவாகியுள்ளது. அதாவது வறண்ட ஈரப்பதமற்ற மேற்கு திசை காற்று காரணமாக இன்று தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று கடும் வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வாளர்கள் ஏற்கனவே கணித்திருந்தனர்.
அதன்படி இன்று திருநெல்வேலி உட்பட மேற்கண்ட மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் பகல் ஒரு மணி நிலவரப்படி, 105 டிகிரி அளவுக்கு வெயில் பதிவானது. இதன் காரணமாக கடும் அனல் காற்று வீசியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். குறிப்பாக வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து இந்த மாதம் முழுவதுமே வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும், மழைப்பொழிவு மிகவும் குறைவாகவே இருக்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே தமிழகத்தில் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் 1ஆம் தேதி தொடங்கி தற்போது வரை 21 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

