ETV Bharat / state

மாஞ்சோலையில் இருப்பதோ 93 வாக்காளர்கள்; 1,182 எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றப்பட்டது எப்படி?

பிஎல்ஓ-களிடம் “மேலே செல்லவில்லை” என எழுதி கொடுக்க அதிகாரிகள் அழுத்தம் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாஞ்சோலையில் மலைகளின் நடுவே அமைந்திருக்கும் தொழிலாளர்களின் குடியிருப்புகள்
மாஞ்சோலையில் மலைகளின் நடுவே அமைந்திருக்கும் தொழிலாளர்களின் குடியிருப்புகள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 15, 2025 at 7:21 PM IST

4 Min Read
Choose ETV Bharat

By இரா. மணிகண்டன்

தமிழ்நாட்டில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR/எஸ்.ஐ.ஆர்) நடைபெற்று முடிந்துள்ளன. இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், எஸ்.ஐ.ஆர் பணியின் மூலம் சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பீகாரை போன்று தமிழ்நாட்டிலும் எஸ்.ஐ.ஆர் பணியில் குளறுபடி நடப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த சூழலில், திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மலைப்பகுதியில், அங்கு வசிக்காத ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவம் வழங்கப்பட்டு, விவரங்கள் மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் புகார் எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாஞ்சோலை தோட்ட பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் மூடப்பட்டுள்ளன
மாஞ்சோலை தோட்ட பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் மூடப்பட்டுள்ளன (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், உண்மை நிலை என்ன என்பதை அறிய ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகக் குழு மாஞ்சோலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது. மாஞ்சோலை என்பது திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மணிமுத்தாறு அணையில் இருந்து சுமார் 3,000 அடி உயரத்தில் அமைந்துள்ள வனப் பகுதி ஆகும்.

மாஞ்சோலைப் பகுதி

நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கம்பட்டி ஜமீனின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பகுதியில், மும்பையைச் சேர்ந்த பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (BBTC) என்ற நிறுவனம் குத்தகைக்கு எடுத்து தேயிலை தோட்டம் அமைத்தது. மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய ஐந்து பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் இருந்தன.

2028 ஆம் ஆண்டுடன் ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு நிறுவனத்தால், அங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு (VRS) அறிவிக்கப்பட்டது. ஒரு காலத்தில் 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்த நிலையில், நிறுவனம் மூடப்பட்ட போது 534 தொழிலாளர்கள் மட்டுமே அங்கு பணியில் இருந்தனர்.

நிறுவனம் மூடப்பட்டாலும், நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலையில் வசித்து வந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்தனர். அரசு தங்களுக்கு அங்கேயே வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர வேண்டும், கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. வழக்கு முடியும் வரை அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நிரந்தர குடியிருப்பாளர்கள்

அதன்படி அரசு சார்பில் குடியிருப்புகள், வங்கி கடன் உதவி உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதனால் 534 குடும்பங்களில், சுமார் 200 குடும்பங்கள் மாஞ்சோலை மலைப் பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்து குடியேறினர். தற்போது மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி பகுதிகளில் மொத்தம் 320 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் நூற்றுக்கும் குறைவான குடும்பங்கள் மட்டுமே அங்கு நிரந்தரமாக வசித்து வருகின்றன.

தேயிலை தோட்டம் மூடப்பட்டதால், நாம் சென்ற நேரத்தில் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. தபால் நிலையம், சுகாதார நிலையம், ரேசன் கடை உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. மாஞ்சோலை பாகம் எண் 98-ல் உள்ள வாக்குச்சாவடியான பிபிடிசி தொடக்கப் பள்ளியும் மூடப்பட்டிருந்தது. எனினும், சில வீடுகளில் மட்டும் மக்கள் வசித்து வந்ததை பார்க்க முடிந்தது.

மாஞ்சோலையில் பிபிடிசி நிறுவனத்திற்கு சொந்தமான மழலையர் தொடக்கப்பள்ளி மூடப்பட்டுள்ளது
மாஞ்சோலையில் பிபிடிசி நிறுவனத்திற்கு சொந்தமான மழலையர் தொடக்கப்பள்ளி மூடப்பட்டுள்ளது (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், கடந்த மாதம் பிஎல்ஓக்கள் (BLO) மாஞ்சோலை மக்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்களை வழங்கினர். மொத்தம், 1,182 படிவங்கள் வழங்கப்பட்டு, அவை திரும்பப் பெறப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அரசு தரப்பில் 100-க்கும் குறைவானோர் மட்டுமே வசிப்பதாக கூறப்படும் நிலையில், இவ்வளவு படிவங்கள் எவ்வாறு வழங்கப்பட்டது? என்ற கேள்வி எழுந்தது.

பெண் தொழிலாளி எலிசபெத், “35 ஆண்டுகள் வேலை செய்தும் நிவாரணம் குறைவாக இருப்பதால் இங்கேயே இருக்கிறோம். விண்ணப்பம் நேரில் வந்து கொடுத்தார்கள். இது எங்களின் கடைசி தேர்தலாக இருக்கலாம் என்பதே வேதனை” என்று வருத்தத்துடன் நம்மிடம் தெரிவித்தார்.

மாஞ்சோலை வாக்காளர்கள்

இதற்கிடையில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றனர். ஆய்வில், மாஞ்சோலை பகுதிகளில் மொத்தம் 93 வாக்காளர்கள் மட்டுமே தற்போது வசிப்பதாக தெரிய வந்தது. அதில் தற்போது மாஞ்சோலையில் உள்ள பாகம் எண் 98-ல் 45 வாக்காளர்களும், நாலுமுக்கு பகுதியின் பாகம் எண் 99-ல் 21 பேர், பாகம் எண் 100-ல் 17 பேர், ஊத்து பகுதியில் பாகம் எண் 101-ல் 10 பேர் என 93 வாக்காளர்கள் மட்டுமே வசிப்பதாக அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

எஸ்.ஐ.ஆர் குறித்து மாஞ்சோலை குடியிருப்புவாசிகள் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

இதன் அடிப்படையில், பிஎல்ஓ-க்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் குடியேறியவர்களையும் பட்டியலில் சேர்த்ததாக கூறி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதே நேரத்தில், பிஎல்ஓக்கள் நேரில் வந்து விண்ணப்பம் வழங்கியதாக தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இதனால், பிஎல்ஓ-களிடம் “மேலே செல்லவில்லை” என எழுதி கொடுக்க அதிகாரிகள் அழுத்தம் தருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொழிலாளர்கள் கூறுகையில், பிஎல்ஓ-க்கள் நேரில் வந்து விண்ணப்பம் வழங்கியதாகவும், பூர்த்தி செய்து கீழே கொண்டு சென்று வழங்கியதாகவும் தெரிவித்தனர். விண்ணப்பத்தை திரும்பப் பெற பிஎல்ஓக்கள் மேலே வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

”இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருக்கும் போது உயிருடன் இருப்பவர்கள் பெயர்கள் ஏன் நீக்கப்படுகின்றன?” என இங்கு வசித்து வரும் கதீஜா கேள்வி எழுப்பினார். மேலும், “எஸ் ஐ ஆர் விண்ணப்பத்தை நேரில் வந்து கொடுத்தார்கள். அதில் நாங்கள் மாஞ்சோலை முகவரியை தான் குறிப்பிட்டுள்ளோம். இங்கே இருப்பவர்களுக்கு நேரில் கொடுத்தார்கள்.

கீழே இறங்கியவர்களுக்கு இங்கு இருப்பவர்கள் சிலர் வாங்கிக் கொண்டு கொடுத்தனர். சிலர் கீழே கல்லிடைக்குறிச்சியில் நேரடியாக சென்று விண்ணப்பம் வாங்கினார்கள். விண்ணப்பத்தை திரும்ப வாங்க அதிகாரிகள் நேரில் வரவில்லை; நாங்கள் தான் கீழே கொண்டு கொடுத்தோம்” என்று தெரிவித்தார்.

93 வாக்காளர்கள்

இவரை அடுத்து பேசிய மனோகரன் என்பவர், “26 ஆண்டுகளாக இங்கேயே வாக்களித்து வரும் எங்களுக்கு இங்கேயே வாக்குரிமை வழங்க வேண்டும். 93 பேர் தான் வசிப்பதாக சொல்கிறார்கள். விண்ணப்பங்களை வீடு வீடாக கொடுக்கும் போது புகைப்படம் எடுத்துள்ளனர். எனவே, விண்ணப்பம் வாங்கும் போது மக்கள் எவ்வளவு பேர் இங்கு இருந்தார்கள் என்பதை சோதனைச் சாவடியில் ஆய்வு செய்தாலே தெரிந்து விடும். எல்லோரும் இங்கே தான் விண்ணப்பத்தை வாங்கி உள்ளனர். அனைவருக்கும் இங்கேயே ஓட்டுரிமை கொடுத்தால் அவர்கள் இங்கு வந்து ஓட்டு போடுவார்கள்” என்று தெரிவித்தார்.

இந்த தகவல்களின் அடிப்படையில், பிஎல்ஓ-க்கள் விண்ணப்பம் வழங்கியது உண்மை என்றும், ஆனால் விண்ணப்பம் திரும்பப் பெறுவதில் குளறுபடி ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. காலியாக உள்ள வீடுகளுக்கும் விண்ணப்பம் வழங்கப்பட்டதே குழப்பத்திற்கு காரணமாகியுள்ளது.

அரசு தரப்பில், நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுத்துள்ளதாகவும், அதனால் வாக்குச்சாவடிகள் 5-ல் இருந்து மூன்றாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மாதம் ரூ.2 லட்சம் வரை வருமானம்; சுடுமண் கைவினைக் கலையில் அசத்தும் திருநங்கை

வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “விண்ணப்பம் வழங்குவது கடமை. இறுதி முடிவு அரசின் உரிமை. தற்போது வசிக்கும் 93 பேருக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் தற்போது வசிக்கும் முகவரியில் படிவம் 6 -ன் மூலம் பெயர் சேர்க்கலாம்” என்றார்.

கடந்த 100 ஆண்டுகளாக செயல்பட்ட தேயிலை தோட்டத்திற்கு இது கடைசி தேர்தலாக இருக்கலாம் என தொழிலாளர்கள் கருதுகின்றனர். எனவே, மாஞ்சோலையிலேயே வாக்களிக்க வேண்டும் என்ற அவர்களின் ஆசை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.