ETV Bharat / state

சாக்லேட் சாப்பிட்ட சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு - ஆன்லைன் செயலி கிடங்கில் அதிகாரிகள் சோதனை

பாதிக்கப்பட்டவரிடம் புகார் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனை செய்த அதிகாரிகள்
சோதனை செய்த அதிகாரிகள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 23, 2026 at 9:05 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஆன்லைன் செயலி மூலம் டெலிவரி செய்யப்பட்ட சாக்லேட்டை சாப்பிட்ட 10 வயது சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், ஆன்லைன் செயலி குடோனில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், தென்றல் நகர், மேற்கு பகுதியைச் சேர்ந்த ஓமனா (62). இவரது பேத்தி, தனக்கு சாக்லேட் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து ஓமனா ஆன்லைன் செயலி மூலம் 200 கிராம் கொண்ட சாக்லேட் ஆர்டர் செய்தார். ரூ.1,199 மதிப்புள்ள அந்த சாக்லேட் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.908.50-க்கு வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டது.

சாக்லேட் டெலிவரி செய்யப்பட்ட நிலையில், ஓமனா மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த போது சிறுமி பாக்கெட்டை திறந்து சாக்லேட்டை எடுத்து சாப்பிட்டுள்ளார். அதில் ஒரு சாக்லேட்டை ஓமனாவுக்கும் கொடுத்துள்ளார். அதை திறந்து பார்த்தபோது சாக்லேட் நிறம் வழக்கத்திற்கு மாறாக இருந்ததால் ஓமனா சந்தேகம் அடைந்தார். இதையடுத்து சாக்லேட் பாக்சை சரி பார்த்தபோது கடந்த 3 ஆம் தேதியுடன் காலாவதியானது தெரிய வந்தது.

இந்த நிலையில் சாக்லேட் சாப்பிட்ட சிறுமி சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து வயிற்று வலியால் துடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்தவர்கள் ஆண்டிபயாடிக் ஊசி போட்டுள்ளனர். ஆனாலும் சிறுமி உணவு எடுத்துக் கொண்டால் தொடர்ந்து வாந்தி எடுத்து அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் உணவு பாதுகாப்புத் துறைக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் குறிப்பிட்ட ஆன்லைன் செயலியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகாரளித்த போது வேறு சாக்லேட்டை மாற்றி தருவதாக மட்டுமே பதில் அளித்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே சிறுமியின் உடல்நிலை இன்னும் முழுமையாக சீராகவில்லை என்றும் ஆன்லைன் மூலம் உணவுப் பொருட்கள் வாங்கும் போது காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்களை கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை என புகார் - பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதம்

இந்நிலையில் அம்பத்தூரில் உள்ள குறிப்பிட்ட ஆன்லைன் செயலி கிடங்கில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை திடீரென செய்தனர். மாவட்ட அதிகாரி கதிரவன் தலைமையில் சென்ற அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவரிடம் புகார் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.