இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பத்தால் விளைந்த காய்கறிகள்; ஓசூரில் களைகட்டிய உணவுத் திருவிழா
இந்தியாவின் விவசாய வலிமையும், இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பமும் கைகோர்த்தால் கிடைக்கும் வெற்றிக்கு சான்றாக இந்த உணவுத் திருவிழா அமைந்துள்ளது.

Published : February 25, 2026 at 8:04 PM IST
கிருஷ்ணகிரி: ஓசூரில் இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பத்தால் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மூலம் சமைத்த சுவையான உணவுத் திருவிழா விருந்து களைகட்டியது.
சிவப்பு மண்ணும், பிரம்மாண்ட தொழிற்சாலைகளும் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஒரு சுவையான மாற்றத்திற்கு சாட்சியாக நவீன விவசாய நடைமுறைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மூலம் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வருமானம் புதிய உச்சத்தை எட்டும் விதமாக, ‘இந்திய - இஸ்ரேலிய விவசாய சங்கமம்’ என்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மைக்ரோடெக் பிராஃபிட் ஆக்ரோ (Microtek Profit Agro) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் விவசாயம், உலகத்தரம் வாய்ந்த உணவு வகைகள் என இரு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. இந்தியாவின் விவசாய வலிமையும், இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பமும் கைகோர்த்தால் எப்படி இருக்கும்? என்பதற்கு விடையாக அமைந்தது இன்று ஓசூரில் நடைபெற்ற இந்த சந்திப்பு.

மேலும், இந்தியா - இஸ்ரேல் இடையே வளர்ந்து வரும் விவசாய உறவை பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. இதில், தென்னிந்தியாவிற்கான இஸ்ரேலிய வர்த்தக தூதரகத்தின் தலைவர் யைர் ஓஷெராஃப், சுற்றுலா விவகார தூதர்கலிட் ஹாஃப்மேன் மற்றும் இந்தோ-இஸ்ரேல் வர்த்தக கூட்டமைப்பின் துணைத் தலைவர் டேவிட் கீனன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
அதுமட்டுமின்றி, இஸ்ரேலின் புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரும், சமூக ஆர்வலருமான ரூத்தி ரூசோவின் வருகை இந்நிகழ்வை மேலும் சிறப்பாக்கியது. பண்ணையில் இருந்து நேரடியாக பறிக்கப்பட்ட மொசைக் தக்காளி, பீட்ரூட் ஹம்மஸ் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்த சாக்லேட் ட்ரஃபிள்ஸ் என ரூத்தி ரூசோ தயாரித்த உணவுகள், தரமான சாகுபடி முறைகள் இவையாவுமே உணவின் சுவையை எப்படி மாற்றும் என்பதை நிரூபித்தன.
இதில் முக்கிய அம்சங்களாக, இஸ்ரேலின் துல்லியமான நீர்ப்பாசனம் மற்றும் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற விவசாய நுட்பங்கள், இந்தியாவின் பரந்து விரிந்த விவசாய நிலங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்ததோடு மட்டுமல்லாது... பாதுகாப்பான, அதிக மகசூல் மற்றும் உயர்தர உணவு உற்பத்தியை இந்திய விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதே மைக்ரோடெக் பிராஃபிட் ஆக்ரோவின் முக்கிய நோக்கமாகவும் கூறப்படுகிறது.

இது வெறும் வர்த்தகமாக மட்டுமின்றி, இரு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் உணவுப் பழக்கங்களை இணைக்கும் ஒரு பாலமாக அமைந்துள்ளது. இதனை மைக்ரோடெக் பிரைவேட் இயக்குநர் முரளிபாபு மற்றும் மைக்ரோடெக் பிராஃபிட் ஆக்ரோவின் அந்தோணி உள்ளிட்டோர் நடத்தினர்.
இதுகுறித்து மைக்ரோடெக் பிராஃபிட் அக்ரோ துணை தலைவர் விக்னேஷ் முரளிபாபு கூறியதாவது, “இந்த பண்ணையில் ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) மற்றும் குரோ பேக் (Grow bag) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, துல்லியமான முறையில் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக, தக்காளி, செர்ரி தக்காளி, லெட்டியூஸ், வெள்ளரிக்காய் மற்றும் மஸ்க்மெலன் போன்றவை உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 14 மாதங்களாக இதனை நடத்தில், லாபமும் ஈட்டி வருகிறோம். இன்னும் 10 நாட்களில் துபாய்க்கும் அனுப்ப உள்ளோம்.
இதன்மூலம் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்ய முடியும். பாரம்பரிய விவசாயத்தை விட 80 முதல் 90 சதவீதம் வரை தண்ணீரை சேமிக்க முடியும். அதுமட்டுமின்றி, 5 மடங்கு கூடுதல் மகசூல் கிடைக்கிறது. 90 சதவீதத்திற்கும் குறைவாக பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுவதால், இங்கு விளையும் காய்கறிகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்து காணப்படும்.
இதன் முக்கிய நோக்கமே சத்தான உணவு என்பதுதான். எனவே, இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து உருவாக்கப்பட்ட மேம்பட்ட நீர்ப்பாசன தொழில்நுட்பத்தின் மூலம், ஒவ்வொரு செடிக்கும் 0.2 மில்லி கிராம் அளவு உரங்கள் கூட மிகவும் துல்லியமாக வழங்கப்படுகிறது. மைக்ரோடெக் நிறுவனம் பண்ணை வடிவமைப்பில் தொடங்கி, ஒரு வருடம் வரை விவசாயிகளுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்குகிறது.
தற்போது, இந்த காய்கறிகள் அவற்றின் உற்பத்தி செலவு காரணமாக, 5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் மாநகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. விரைவில் சாதாரண மக்களும் எளிதாக பயன்படுத்தும் வகையில், செலவை குறைக்க திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து டாக்டர் பாரதி கூறியதாவது, “புதிய விஞ்ஞான தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான தக்காளி மற்றும் கீரைகள், குறைந்த தண்ணீர் செலவில் விளைவிக்கப்படுகிறது. இதனால், வருடம் முழுவதும் பலன் கிடைக்கும் என்பதால், நல்ல வருமானமும் கிடைக்கிறது. எந்த விதத்திலும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது” என்று தெரிவித்தார்.

