வேலையை முடித்த 'ஃபிளமிங்கோ...' கலங்கரை விளக்கம் - திருமயிலை இடையே மெட்ரோ சுரங்கம் பணி நிறைவு
கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை இடையேயான இரண்டு சுரங்கப் பாதைகளும் தற்போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

Published : February 27, 2026 at 9:55 PM IST
சென்னை: மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள ஃபிளமிங்கோ சுரங்கம் தோண்டும் இயந்திரம் கலங்கரை விளக்கத்தில் இருந்து வெற்றிகரமாக பணியை முடித்து திருமயிலை நிலையத்தை வந்தடைந்தது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், ஃபிளமிங்கோ என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் கலங்கரை விளக்கத்திலிருந்து (downline) சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கி வெற்றிகரமாக பணியை முடித்து திருமயிலை நிலையத்தை இன்று வந்தடைந்தது. இதற்கு முன்னதாக, இதே ஒப்பந்தத்தின் கீழ் கழுகு எனும் சுரங்கம் தோண்டும் இயந்திரம், கடந்த 9.2.2026 அன்று (upline) சுரங்கப்பாதை அமைக்கும் பணியை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
1,985 மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த சுரங்கம் அமைக்கும் பணி சென்னையின் மிகவும் முக்கியமான மற்றும் நெரிசலான பகுதிகளின் வழியே செல்கிறது. குறிப்பாக சென்னை கலங்கரை விளக்கம், அகில இந்திய வானொலி நிலையம், ரஷ்ய தூதரகம், ரோசரி தேவாலயம் மற்றும் பறக்கும் ரயில் (MRTS) பாலம், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான கட்டடங்களுக்கு அடியில் வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ளது.
இந்தப் பணியின் போது, பாறை அடுக்குகள், இரண்டு சுரங்கங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அமைக்கப்பட்டதால் (Stacked tunnel) உருவான அதிகப்படியான ஆழம் மற்றும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட எரிவாயு கசிவு (Gas pockets) போன்ற சவாலான புவியியல் சூழல்களைக் கடந்து இந்தத் துளையிடும் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பகுதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கழுகு (Eagle) மற்றும் ஃபிளமிங்கோ (Flamingo) என பெயரிடப்பட்ட இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை பயன்படுத்தியது. இன்றைய மைல்கல் சாதனையின் மூலம், கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை இடையேயான இரண்டு சுரங்கப் பாதைகளும் தற்போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும்போது மயிலாப்பூர், லஸ் கார்னர் மற்றும் மத்திய சென்னை இடையேயான போக்குவரத்து இணைப்பை பெருமளவில் மேம்படுத்தும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிக உயர்ந்த பொறியியல் மற்றும் பாதுகாப்புத் தரங்களைக் கடைப்பிடித்து, 1981 மீட்டர் நீளமுள்ள இந்த சிக்கலான சுரங்கப் பாதை பணி பாதுகாப்பாக முடிக்கப்பட்டுள்ளது. ஃபிளமிங்கோ (Flamingo) மற்றும் கழுகு (Eagle) என்று அழைக்கப்படும் இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும், இப்போது திருமயிலையிலிருந்து போட் கிளப் (Boat Club) நோக்கி அடுத்தகட்டப் பணிகளுக்காக மீண்டும் இயக்கப்பட உள்ளன.

